ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான எத்தியோப்பியா நாட்டில் இருந்து ஏமன் நாட்டுக்குச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று நடுக்கடலில் திடீரென கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 70 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதுகுறித்து ஏமன் உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “எத்தியோப்பியாவிலிருந்து சட்டவிரோதமாக 70 அகதிகள் சென்ற படகு ஒன்று, மோசமான வானிலை காரணமாக அல்-மக்கா துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், படகிலிருந்த 70 பேர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். எத்தியோப்பியாவில் இருந்து ஏமன் சென்று பின்னர் அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு செல்ல 70 அகதிகளும் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்குள் துரதிஷ்டவசமாக அவர்கள் மரணம் அடைந்துவிட்டதாகவும் தெரிகிறது”.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டவிரோதமாக எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் ஏமன் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஆனால் ஆபத்தான சூழலில், பணத்திற்காகஅளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வரும் படகுகள் உரிமையாளர்களால் இதுபோன்ற விபத்துக்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது.
2014-ஆம் ஆண்டில் இத்தகைய விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, கடந்த 2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக உயிரிந்தவர்களின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.
எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க எத்தியோப்பியா கடல் பகுதிகள் ராணுவம் ரோந்து வரவேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
















