10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயரும் – ஆய்வில் தகவல்

இந்தியாவிலுள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை இன்னும் பத்து ஆண்டுகளில் 3 மடங்கு உயரும் என ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் அதிக அளவில் பணக்காரர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஏ.எப்.ஆர்.ஆசிய வங்கி அறிக்கையின்படி, தற்போது இந்தியாவில் 119 பில்லியனர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2027-ம் ஆண்டிற்குள் 357 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இன்னும் பத்து ஆண்டுகளில் கூடுதலாக 238 பெரும் பணக்காரர்கள் இந்த பட்டியலில் இணைவார்கள் என கூறப்படுகிறது.

அதே சமயம் உலகளவில் மொத்தம் 2,252 ஆக உள்ள பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 2027-ம் ஆண்டில் 3,444-ஐ எட்டும் எனத் தெரிகிறது. இதேபோன்று ரஷ்யாவில் 142, பிரிட்டனில் 113, ஜெர்மனியில் 90 மற்றும் ஹாங்காங்-ல் 78 பில்லியனர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் அதிகரிக்கவுள்ளனர்.

ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் தனி மனிதனுக்கு சொந்தமான மொத்த சொத்து மதிப்பைக் கூட்டிக் கணக்கெடுத்ததில் பணக்கார நாடுகளின் பட்டியலில், 8,230 பில்லியன் டாலர்கள் மதிப்புடன் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மொத்தம் 62,584 பில்லியன் டாலர்கள், சொத்து மதிப்புடன் அமெரிக்காவே செல்வம் மிகுந்த நாடாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து சீனா 2-வது (24,803 பில்லியன் டாலர்) இடத்திலும், ஜப்பான் (19,522 பில்லியன் டாலர்) 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவின் சொத்துமதிப்பு அதிகரிக்க உதவும் விஷயங்களாக அதிகளவிலான தொழில் முனைவோர்கள், நல்ல கல்வி முறை, தொழில் செயல்முறை அவுட்சோர்சிங், ரியல் எஸ்டேட், சுகாதார மற்றும் ஊடக துறை ஆகியவை உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் 200% வணிக வளர்ச்சியைக் காணலாம் என்று கூறப்படுகிறது.

அதே சமயம், உலகளாவிய சொத்து மதிப்பு 50 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2027 ஆம் ஆண்டில் 321 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொடும். ஆசிய கண்டத்தில் அதிவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளாக இந்தியா, இலங்கை, வியட்நாம், சீனா, மொரீஷியஸ் ஆகிய நாடுகள் உள்ளது என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!