வடக்கில் கோத்தாவுக்கு மூன்றாமிடம் தான்!

இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்த ராஜபக்ஷ குடும்பத்தை, தமிழ் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என, ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை தமிழர்களால் மறக்க முடியாது. ஆனால், இரு சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு மற்றும் போர்க் குற்றத்தில் பிரதான குற்றவாளி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய எனப் பலரும் கூறுகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போர்க்குற்றம் என்பவற்றுக்கு அவரே முழுப்பொறுப்பு.

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த பலரை ஈவிரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்த ராஜபக்ஷ குடும்பத்தைத் தமிழ் மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். குற்றம் புரிந்த அனைவருக்கும் சர்வதேச விசாரணை ஊடாக தண்டனை கிடைக்க வேண்டும் அதற்காகவே நாம் இன்று வரை போராடி வருகின்றோம்.

மன்னிக்கக்கூடிய குற்றத்தைச் செய்யவில்லை என்பதை ராஜபக்ஷகுடும்பமே புரிந்துகொள்ளவேண்டும். தற்போது மஹிந்தவின் மகனான குட்டிச்சால்வை என்று அழைக்கப்படும் நாமல், யாழ்ப்பாணத்திற்கு வந்து இரண்டு வருடத்தில் தீர்வு தருவதாகக் கூறுகின்றார். நாமல் தான் அவ்வாறு கூறுகின்றார் என்று பார்த்தால் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனும் மிக விரையில் தீர்வு என்கின்றார்.

இவர்கள் எல்லாரும் எந்த அடிப்படையில் மிக விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றார்கள் என்று தெரியவில்லை.தென்னிலங்கை அரசின் அரைகுறை வாக்குறுதிகளால் நாம் தொடர்ந்தும் ஏமாற முடியாது.

தேர்தலில் மக்கள் எனக்கு வாக்களிப்பார்களா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ எள்ளி நகையாடும் வகையில், சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எமது மக்கள் நினைத்தால் பலதும் செய்வர். நடைபெறவுள்ள தேர்தலில் குறிப்பாக வடக்கு மக்கள் என்ன செய்வார்கள் என்பதனை பொறுத்திருந்து பாருங்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோத்தாபயவை வடக்கில் மூன்றாம் நிலைக்குத் தள்ளும் நிலைமையே உருவாகும். நாட்டில் எந்தப் பாகத்திலும் கோத்தாபய முன்னுக்கு வந்தாலும் வடக்கில் முதலாது அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்கவே முடியாது. மேலும், நான் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து ஒரு வாரத்துக்குள் விலகவேண்டும் என ரெலோக் கட்சியினர் கேரியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். எனக்கு அவ்வாறான கோரிக்கை எதுவும் எழுத்து மூலம் கிடைக்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!