சஜித்துடன் நேரடி விவாதத்துக்கு வர தயங்கும் கோத்தா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை நேருக்கு நேர் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் அவர் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் சஜித் பிரேமதாசவின் உத்தியோகப்பூர்வ ருவிட்டர் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை நேருக்கு நேர் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நேற்றுமுன்தினம் தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் கணக்கில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்திருந்தார்.

என்றாலும் அக் கருத்துக்கு கோத்தாபய ராஜபக்ச தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் நேற்று பிற்பகல் பதிவொன்றை பதிவிட்டிருந்த சஜித் பிரேமதாச, கோத்தாபய ராஜபக்சவை நேருக்கு நேர் விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்துள்ளது. ஆனால், அவர் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. கருத்துக்களை வெளியிட முடியாது அச்சத்துடன் ஓடுவதும் சவால்களை எதிர்கொள்ள முடியாதவர்களும் ஜனாதிபதியாக தகுதியற்றவர்கள் எனக் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!