நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையிலேயே தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் சுயாட்சி அதிகாரங்களை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விஞ்ஞாபனத்தின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் விஞ்ஞாபனத்தை காரணம் காட்டி ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத் தெரிவிக்குழுவிலிருந்து விலகியமை பற்றி கவனம் செலுத்தப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அபிலாஷைகள் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளின் தேர்தல் கொள்கைகளை கூட்டமைப்பு நன்கு விளங்கிக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க நாட்டம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய ஒட்டுமொத்தமாகவே எதிர்க்கின்றது எனவும், அதற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக்கொண்டு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் விஞ்ஞாபனத்தை ஜாதிக ஹெல உறுமயவினால் விளங்கிக்கொள்ள முடியாமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் செய்ய முடியாது என சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
















