2013 வடமாகாண சபைத் தேர்தல்: யதார்த்தங்களும் சவால்களும் – திருவரங்கன் திருவேரகன்

votingசனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற 1 ஆம் கட்ட உரிமைப் போராட்டம் பயனளிக்காத நிலையில் ஆரம்பிக்கப்பட்ட 2 ஆம் கட்ட ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் யுத்தத்துடன் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் ஆரம்பித்த 3 ஆம் கட்டப் போராட்டம் சருவதேச சமூகத்தின் பங்குபற்றுதலுடன் நடைபெறுகின்ற உரிமைப் போராட்டமாக உருவெடுத்தள்ளது. அதனது சாதக பாதங்களுக்கு அப்பால் அரசியல் தீர்வு என்ற விடயம் தமிழ்மக்களை ஒரு இக்கட்டான சருவதேசப் பொறிக்குள் தற்போது சிக்கவைத்துள்ளது என்பதை தமிழர்களாகிய நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

யாது காரணத்தினாலோ இவ்வாண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் இலங்கை அரசிற்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு நிபந்தனையாக வட மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நிபந்தனையும் குறிக்கப் பட்டுள்ளது. இதன் கருத்து யாதெனில் மாகாணசபை தான் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு எனறும்; வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதாக அமையும் எனவும் சருவதேசம் கருதுகின்ற நிலைமையும் வெளிப்பட்டுள்ளது.

அடுத்த மீளாய்வின் போது இலங்கை அரசாங்கம் தாம் அத்தகைய கோரிக்கையை நிறைவேற்றி விட்டோம் என்று அறிக்கை சமர்ப்பிக்கப் போகிறது: “தமிழ்மக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தெரிவு செய்து விட்டார்கள். இதன் மூலம் தமிழ்மக்களுக்குரிய அரசியல் தீர்வு வழங்கியாகி விட்டது’ என்ற நிலைமை ஏற்படப் போகிறது. இந்த அபத்தமான பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கியுள்ளமைக்குக் காரணம் யார் என்று மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டு இருப்பதை விட என்ன செய்யலாம் என்பதை யதார்த்த ரீதியில் சிந்திக்க வேண்டும். சர்வதேசம் ஏற்படுத்தியுள்ள இந்தப் பொறிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது பிராந்திய நலன்களும் வல்லரசுகளின் நலன்களுமே என்பதை நாம் ஏற்றாக வேண்டும். பிராந்திய வல்லரசுகளின் நலன் மற்றும் சர்வதேச வல்லரசுகளின் நலன் என்ற சட்டகத்துக்குள்ளே தான் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு உள்ளது என்பதும் யதார்த்தமாகி விட்டது. இன்னுமொரு யதார்த்தம் யாதெனில் தற்போதைய மாகாணசபை முறையினால் வாழ்வாதார ரீதியிலும், உளவியல் ரீதியிலும், பாதுகாப்பு ரீதியிலும் சிறைப்பட்டுப் போயுள்ள தமிழ் மக்களுக்கு மீட்சியோ அல்லது அரசியல் தீர்வோ கிடைக்காது என்ற நிலையும் உருவாகியுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான அரங்கு இலங்கைக்கு உள்ளே இல்லை. ஆனால் தமிழ்த் தலைவர்கள் தான் இந்த அரங்கத்தை நோக்கி அணுக வேண்டிய நிலையும் உள்ளது.

இந்தச் சூழ்நிலைகளை கருத்திற்கு எடுத்து ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.க.வி.விக்னேஸ்வரனை பல உள்ளக எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராகத் Àரநோக்குடன் துணிந்து தெரிந் தெடுத்துள்ளது? இந்தத் தெரிவினால் தென்னிலங்கை தடுமாறிப்போயுள்ளது! ஆனால் இதனோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இத்தெரிவு சரியானாதே என்பதைத் தேர்தலில் நிரூபித்துக் காட்டவேண்டியது மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளையே பிரதிபலிக்கிறது என்பதையும் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் உட்பட்டுள்ளது. வடக்கில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலிலும் சட்ட பாதுகாப்பு ஒழுங்கு நிலைகளிலும் வைத்துப் பார்க்கும்போது மக்களின் ஏனோதானோ என்ற மனோநிலையிலும் இதை ஒரு கடினமான காரியமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

வட பகுதியில் இறுதியாக நடைபெற்ற தேர்தலில் 50 வீதமானவர்களே தேர்தலுக்குச் சென்று வாக்களித்துள்ளார்கள். வாயோதிபம் அடைந்த வாக்காளர்களும், புத்திபூர்வமான அரசியல் உணர்வற்ற வாக்காளர்களும், சொந்தக் கிராமத்தில் குடியிருக்காத வாக்காளர்களும் இந்த குறைந்த வீதமான வாக்களிப்பு வீதத்திற்கு பிரதான காரணமாவர்.

வடக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாறிமாறி இடம்பெயர்ந்து அன்றாடப் பிழைப்பை மேற்கொள்வதையே பிரதான போராட்டமாக்கி வாழ்க்கையில் சிக்கிப் போயுள்ளார்கள். தேர்தலில் வாக்களிக்கப் போவது அவர்களுக்கு முக்கியமல்ல.

வாழ்க்கையின் அடியாதாரமான நோக்கங்களைக் கைவிட்டு கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில் மோட்டார் சைக்கிள், கையடக்கத் தெலைபேசி, உடைநலுங்கா உத்தியோகம், கலியாணம் பேசுதல், வெளிநாடு செல்லுதல், வேகமாப் பணம் சம்பாதித்தல் போன்ற நோக்கங்களைத் தவிர வேறு சமூகப் பொறுப்புக்களை அறியாத கூட்டமாக மாறியுள்ளனர் இன்னொரு பெரும் பகுதியினர்.

உத்தியோகம், பதவி, புகழ் போன்ற ஆசைவார்த்தைகளினால் எடுபட்டு ஒட்டுக் குழுக்களுடனும் அரசுடனும் சேர்ந்துள்ளார்கள் இன்னொரு பகுதியினர்.

இந்த வகையில் தமிழ் மக்கள் சிதறுண்டிருக்கும் நிலையிலும் கூட அரசாங்கத்தின் நோக்கத்தை முறியடித்து அவர்களை அறிவூட்டி வாக்களிக்கப் பண்ணுவது சாத்தியமானதா? சாத்தியமெனின் இதனைத் தமிழ்க் கூட்டமைப்பு செய்யுமா?

வாக்களிக்காமல் இருக்கின்ற ஆனால் வாக்களிக்க வைக்கக் கூடிய வாக்காளர் தொகையொன்று பெரிதாக உள்ளது. இந்த வகை வாக்காளர்களை ஊக்கப்படுத்தி வாக்களிக்க வைப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறக் கூடிய சாத்தியக்கூறும் உண்டு. ஆனால் வீதாசார பிரதிநிதித்துவ முறையின் பிரதான கேடுகளில் ஒன்றாகிய வேட்பாளர்களுக் கிடையிலான போட்டி என்ற சுயநல கலாசாரம் மேலோங்கி யிருப்பதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிய வாக்காளர்களை அல்லது அக்கறையற்று இருக்கும் வாக்காளர்களை ஈர்த்து அதிக வாக்குகளை சேகரிப்பதன் மூலம் அமோகமான ஆசனங்களைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்பான சூழ்நிலை கவனிப்பாரன்றிக் கிடக்கிறது.

தற்போதைய சூழலில் அரசின் செயற்பாடுகளை அவதானித்தால் பின்வருவன தெளிவாகின்றன:

1. அடுத்த ஜெனிவா மீளாய்வில், மாகாணசபைத் தேர்தலை நடாத்திவிட்டோம், வட மாகாண மக்கள் தாங்கள் விரும்பிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்று கூறி அரசாங்கம் சரிந்து போன தங்கள் செல்வாக்கை நிமிர்த்திவிடும்.

2. தங்களுடையபாட்டில் மாகாணசபை முறையை இல்லாதொழிப்போம் என்ற ஒரு அநாவசியமான கோசத்தை முன்வைத்தும், மாகாணசபை முறை எமக்கு வேண்டும் என்று தமிழ்த் தலைமைகளைக் கேட்க வைத்தும், அதன் பின்னர் மாகாணசபையைக் கொடுப்பதன் மூலம் ஒரு பெரிய தீர்வைத் தந்து விட்டதாகவும் அது சிங்களவர் செய்த மிகப்பெரிய தியாகம் என்ற ஒரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தி விடுவார்கள்.

3. எதிர்ப்பு அரசியல் அழிவையே தரும், ஒத்துழைப்பு அரசியலைத் தவிர வேறு ஒரு தெரிவும் இல்லை என்று நம்பும்படி தமிழ்மக்களுக்கு நெருக்குவாரத்தையும் கொடுத்துள்ளார்கள்.

4. வடக்குக்கிழக்கு இணைப்பு, தேசியம், சுயநிர்ணயம் என்ற கதைகளுக்கு இனி இடமில்லை என்று கூறித்திரிகிறார்கள்.

5. இராணுவ ஆட்சியும் சீரழிவுப் பண்புகளும் அசாதாரணமானவை அல்ல அது சாதாரணமானது என்றும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கிறார்கள்.

6. முள்ளிவாய்க்காலில் அழிந்தவர்கள் எல்லோரும் கேலிக்குரியவர்கள், தமிழ் மக்களின் பாதுகாவலர் இராணுவமும் அரசாங்கமுமே என்றும் மக்கள் தமது வாக்களிப்பின் மூலம் தெரியப்படுத்தல் வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கிறார்கள்.

இந்தச் சூழலில் சனாதிபதியின் அதிகாரத்தினை விஸ்தரிப்பதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள அதிகாரமற்ற, தற்போதைய மாகாண சபை முறையை தமிழ்மக்களும் TNA யும் ஏற்றுள்ளார்கள் என உலகத்துக்குக் காட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவை யாவற்றிற்கும் அபத்தமான மறுபக்கங்கள் உள்ளன என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி தற்போதைய மாகாணசபை முறையின் ஓட்டைகளை வெளிப்படுத்தி எம்மீது சர்வதேச சமூகத்தினால் விதிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுப் பொறியில் இருந்து விடுபடவேண்டுமாயின் அது TNA யின் அமோகமான வெற்றியின் மூலமே சாத்தியமாகும்.

ஏறக்குறைய 30 வீதத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் அக்கறையற்ற வாக்காளர்களாக உள்ளனர். இந்த அக்கறையற்ற வாக்களர்களில் வயோதிபர்கள், உடல் ஊனமுற்றோர், இவர்களைத் தவிர சொந்தக் கிராமங்களை விட்டு வெளியில் குடியிருப்போர் ஆகியோர் பிரதானமாக அடங்குவர். இதனை விட தேர்தல் காலங்களில் பின்வரும் சூழ்நிலைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

1. அடாவடிக் கட்சிகளின் அச்சுறுத்தலினால் மக்கள் வாக்களிக்காது தடுக்கப்படலாம் அல்லது அவர்களது வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்படலாம்.

2. காணாமற்போனோர், தூர இடங்களில் வேலைசெய்வோர், களவாகக் கப்பலில் வெளிநாடு சென்றவர்கள், இறந்தவர்கள் போன்றவர்களின் விபரங்கள் அடாவடிக் கட்சிகளின் கையாட்களுக்குத் தெரியுமாதலால் அத்தகையோரது வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்படலாம்.

3. இறுதிநேரத்தில் கிழக்கிலங்கையில் நடந்தது போல் விபரீமான துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வாக்களிப்பு வீதத்தைக் குறைக்கலாம். ஏற்கனவே அத்தகைய துண்டுப்பிரசுரங்கள் வெளிவந்து விட்டன.

4. சொல்ல முடியாத பல்வேறு பின்னணிக் காரணிகளால் காட்டிக்கொடுப்புக்களுக்குப் பயந்து துடிப்பள்ள இளைஞர்கள் வெளிப்படையாக தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட முன்வராது இருக்கலாம். இதனைப் பயன்படுத்தி அடாவடிக் கட்சிகளின் கையாட்களின் கள்ளவாக்களிப்பு வேலைகள் இடம்பெறலாம்.

5. ஒதுக்குப்புறமான தனித்த குடியிருப்புக்களில் இருந்து மற்றும் இராணுவத்தால் சூழப்பட்ட கிராமங்களில் இருந்து வாக்காளர்கள் வெளியேறாதபடி இராணுவமோ, அரசாங்க சக்திகளோ, அடாவடிக் கட்சிகளோ அவர்களைத் தடுக்கலாம்.

6. தற்போதைய தேர்தல் முறையில் எந்தப் பகுதியல் இருந்து எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை அறிய வாய்ப்புள்ளதால் அதன் மூலம் தேர்தலின் பின்னரான பழிவாங்கலுக்குப் பயந்து தமிழ்மக்கள் வாக்களிக்கப் போகாது பின்வாங்கலாம்.

இத்தகைய சூழ்நிலைகளையும் மீறி சகல வாக்காளர்களையும் அக்கறையுள்ள வாக்காளர்களாக மாற்ற வேண்டிய தேவையுள்ளது. அவர்களைத் துணிவுடனும் புத்திசாதுரியத்துடனும் வாக்களிக்கவைக்க முடியும். அவர்களைத் ஆர்வத்துடன் சென்று வாக்களிக்கச் செய்வதில் தமிழத்;தலைமைகள் அக்கறை காட்டுமா ?

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நடந்த பாடம்:

1. செல்லுபடியற்ற 45000 வாக்குகளில் 75 வீதம் TNA யிற்கு கிடைத்த வாக்குகளே

2. இதில் 10000 வாக்குகளாவது செல்லுபடியாகும் வாக்குகளாக இருப்பின் TNA யே மாகாணசபை அமைத்திருக்க முடியும்.

வாக்காளர் ஒருவர் கட்சிச் சின்னம் ஒன்றுக்கு வாக்களிக்கத் தவறினால் அது செல்லுபடியற்றதாகும். ஆகவே வாக்குச் சீட்டில் முதலில் வீட்டுச் சின்னத்துக்கு நேரே புள்ளடி இடவேண்டும். அதன் பின்னர் அவர்கள் தங்களது விருப்புவாக்குகளை போடவேண்டும். இந்தவிடயம் பலருக்குத் தெரியாதுள்ளது.

முக்கியமாக யாழ்ப்பாண மாவட்டமே அதிகளவான அங்கத்தவர்களைத் தெரிந்தெடுத்து அனுப்பும் மாவட்டம் ஆகையாலும் அந்த மாவட்டத்தில் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர் தெரிந்தெடுக்கப்பட இருப்பதாலும் அவரையே அந்த மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக குறிப்பிட்டிருப்பதாலும் அவர் கண்டிப்பாக அமோக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாக வேண்டும் அல்லாவிடில் TNA யின் தீர்மானம் தவறு என்றாகிவிடும். இதனால் யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர்களுக்கு இது தொடர்பாக விசேடமான பொறுப்பு உண்டு. நிறைவேற்றுவார்களா?

Tags: , ,

Leave a Reply