எம்சிசியில் கைச்சாத்திட முடியாது – அமெரிக்காவுக்கு நிபந்தனை விதிக்கும் இலங்கை!

மிலேனியம் சவால் கூட்டு உடன்படிக்கையில் (MCC) இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதகமான காரணிகளை நீக்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டால் பேச்சு நடத்த இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான (MCC) உடன்படிக்கையில் இலங்கையின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் உள்ளக சுயாதீனத்துக்கும் பாதகமான மற்றும் அச்சுறுத்தலான பல காரணிகள் உள்ளடங்கியுள்ளதாக இந்த உடன்படிக்கை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ் உடன்படிக்கை தொடர்பான மதிப்பீட்டு குழு பிரதமரிடம் நேற்று முன்தினம் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் நல்ல விடயங்கள் இந்த உடன்படிக்கையில் அடங்கியுள்ளன. இதனை வரவேற்கின்றோம். என்றாலும் உத்தேச சில திட்டங்கள் மூலம் இலங்கையின் தேசிய, சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கு தவறான அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய சில சரத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், உத்தேச உடன்படிக்கையின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எமது அரசியலமைப்பையும் நாட்டின் சட்ட விதிகளையும் மீறும் வகையில் அமைந்துள்ளது.

தேசிய நிதியத்துக்கும், இறையாண்மைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் பாதகமான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பாதகமான அம்சங்களை திருத்துதல் மற்றும் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமாகும்.

திருத்தங்களின் பின்னர் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் மற்றும் திட்ட ஆலோசனை குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதும் அவசியம் என்பதுடன், பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த உடன்படிக்கையை வெளிப்படை தன்மையற்ற விதத்தில் ஐ.தே.கவும், சிவில் அமைப்புகளும் இணைந்தே தயாரித்துள்ளதாக உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, அமெரிக்காவுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!