அமெரிக்கா மீண்டும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கிரமமான உள்ளகப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்கத் தவறினால், சர்வதேச ரீதியான பொறிமுறைமையொன்றை உருவாக்க அழுத்தம் கொடுக்க நேரிடும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
தென் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் பதவிக்காக ஜனாதிபதி பரக் ஒபாமாவினால் பரிந்துரை செய்யப்பட்ட நிஷா டேசி பிஸ்வால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை இலங்கை மேற்கொண்டு வரும் நிலையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல மக்களுக்கு நீதி கிடைக்கக் கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தென் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளராக தற்போது முன்னாள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் கடமையாற்றி வருகின்றார். டேய்சி பிஸ்வால், இந்தப் பதவிக்காக நியமிக்கப்படும் முதலாவது தென் ஆசிய பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
















