பொதுநலவாய நாடுகள் அமர்வுகளில் பங்கேற்க வேண்டாம் என உலகத் தலைவர்களிடம் HRW கோரிக்கை

hrwஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க வேண்டாம் என உலகத் தலைவர்களிடம் மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும், இதனால் உலகத் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 54 நாட்டுத் தலைவர்களுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்து கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமர்வுகளில் பங்கேற்கும் நாடுகள் கடைநிலை பிரதிநிதிகள் குழுக்களை அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாக காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ள நிலையில் அமர்வுகளில் பங்கேற்பது பிழையான செய்தியை உலகிற்கு வெளிப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கு வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply