விமானத்தில் வெடிகுண்டு புரளி- இலங்கையரிற்கு 12 வருட சிறை

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து மலேசிய சென்றுகொண்டிருந்த விமானத்தில் குண்டைவெடிக்க வைக்கப்போவதாக போலி நாடகமாடியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையை சேர்ந்த இளைஞரிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2017 ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனோட் மார்க்ஸ் என்ற 26 வயது இளைஞனிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

மெல்பேர்னிலிருந்து மலேசிய நோக்கி சென்றுகொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட இளைஞன் தன்னிடம் வெடிகுண்டிருப்பதாகவும் சத்தமிட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட விமானம் மீண்டும் மெல்பேர்னிற்கு திருப்பிவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

நீலவெளிச்சத்தை வெளிப்படுத்தும் இரு இலத்திரனியல் கருவிகளை காண்பித்த படி விமானத்திற்குள் நடமாடிய இந்த இளைஞன் விமானத்தை தகர்க்கப்போவதாக பயணிகளை மிரட்டினான் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் இலங்கையை சேர்ந்த இளைஞனிற்கு 12 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ள நீதிபதி மனோட் மார்க்ஸ் ஆகக்குறைந்தது 9 வருடங்களாவது சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மார்க் விமானவோட்டியின் அறையின் பக்கமாக நின்று பயணிகளை பார்த்து என்னிடம் குண்டுள்ளது என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள நீதிபதி பயணிகளும் விமான பணியாளர்களும் அச்சமடைந்ததுடன் அவரிடம் உண்மையிலேயே வெடிகுண்டுள்ளது என நம்பினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பயணிகள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்ட்டனர் விமானவோட்டி விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே திருப்பி செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் செல்வந்த குடும்பத்தை சேர்ந்த இந்த இளைஞன் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்பதற்காக சென்றதாகவும் அவ்வேளை போதைப்பொருளிற்கு அடிமையானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானத்தில் ஏறும்போது குறிப்பிட்ட நபர் ஒருவகை போதைப்பொருளை பயன்படுத்தியது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மார்க் தனது தண்டனையை அனுபவித்த பின்னர் அவர் நாடு கடத்தப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!