நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 117 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இதுவரை 4,635 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட் சத்து 26 ஆயிரத்து 380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதன் முதலில் கேரள மாநிலத்தில் தான் இதன் பாதிப்பு உருவானது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை இந்த வைரஸ் தாக்கி இருந்தது. அதை தொடர்ந்து டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரபிரதேச மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்ந்து உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆக உயர்ந்து உள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 17 பேரும், உத்தரபிரதேசத்தில் 10 பேரும், டெல்லியில் 6 பேரும், கர்நாடகாவில் 4 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவின் தாக்குதலில் அதிக பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் ஈரான் 3-வது இடத்தில் இருக்கிறது. இங்கு 6 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிக்கிறார்கள். இதில் மகாராஷ்டிராவை சேர்ந்த 1,100 பக்தர்களும், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 300 மாணவர்களும் அடங்குவார்கள். இதை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும் போது, “இத்தாலியில் உள்ள இந்தியர்களிடம் பரிசோதனை செய்வதற்காக மருத்துவ குழு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தால் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!