புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் 4 சிறுவர்களுக்கு கொரோனா!

புத்தளம்-சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திலிருந்த மூன்று சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தினுஸா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த நிலையத்தில் இணைக்கப்பட்ட 11,9,5 வயதுகளையுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இச்சிறுவர்களை முல்லேரியாவ வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், கொரோன வைரஸ் பரிசோதனை செய்யும் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கரை வயது சிறுவனுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

நீர்கொழும்பு அக்கரபனா பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த 3 ஆம் திகதி இருமல், சுவாசப் பிரச்சினை காரணமாக கொரோன வைரஸ் பரிசோதனை செய்யும் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிறுவனுக்கு கொவிட்-19 நோய் இருப்பது தெரியவந்ததாகவும் சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை பணிப்பாளர் சுஜீவ ரத்நாயக்க தெரிவித்தார்.

நீர்கொழும்பு அக்கரப்பனா கந்த சுரித்து கம எனும் இடத்தில் வசிக்கும் குறித்த சிறுவனுக்கே கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இச் சிறுவன் நீர்கொழும்பு பொது வைத்திய சாலையில் அனுமதிப்பதற்கு முன் நீர்கொழும்பு முன்னக்கரை பிரதேசத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிலும், அக்கரப்பனா பிரதேசத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.

அத்துடன், இச்சிறுவரின் குடும்பத்தார் நீர்கொழும்பில் பல இடங்களுக்கும் சென்றுள்ளதால், குடும்பத்தார் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் வீடு அமைந்துள்ள வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக, கட்டான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் யசந்த ரத்னாயக்க தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள சிறுவனின் தாயார் கர்ப்பிணி என்றும் பாட்டி நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ள சிறுவனுடன் வைத்தியசாலையில் இருந்தவரென்றும் வீட்டில் மொத்தமாக ஆறு பேர் வசிப்பதாகவும் கட்டான பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் முன் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு காய்ச்சல் இருப்பதாக சுகாதாரப்பிரிவு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பெண் விசேட அம்புலன்ஸ் மூலமாக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!