இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை தொடக்க காலம் தொட்டு கொச்சைபடுத்தியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வந்த ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்க மாட்டார்கள். ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானத்தவர், ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பதை விக்னேஸ்வரன் தெரி்யாதோ? ஈழத் தமிழர்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முதலில் சிங்கள காவல் துறையையும், பிறகு இராணுவத்தையும் ஏவிவிட்டு தமிழர்களை திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கிய இலங்கையை ஆண்டு வந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் இனவெறிபிடித்த நடவடிக்கைகளே அங்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டது என்கிற வரலாறும் விக்னேஸ்வரன் அறியாதவரோ? அதனால்தான், ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கதை விடுகிறார்.
















