“வடக்கின் வசந்தத்தில்இருந்து விலகுவோம்” தம்பி பசில் – தேர்தலில் ஆதரித்தால் அபிவிருத்தி அண்ணன் மகிந்த

mahinda-basil“இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க தரப்பை ஆதரித்து வாக்களித்தால் வடக்கிற்காகன உதவிகளையும், அபிவிருத்திப் பணிகளையும் இரட்டிப்பாக செய்வேன்” என கிளிநொச்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்..

வடக்கின் கிளிநொச்சிக்கான புகையிரத சேவையை ஆரம்பித்த ஜனாதிபதி, ஓமந்தையிலிருந்து முதலாவது பயணியாக கிளிநொச்சியைச் சென்றடைந்தார்.

அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போரினால் அழிவுக்குள்ளான பிரதேசத்தின் தேவைகள் அனைத்தையும் மந்திர வித்தைக்காரரைப் போல, தன்னால் உடனடியாகப் பூர்த்தி செய்ய செய்ய முயாது எனவும் அதற்குத் தனக்கு போதிய கால அவகாசம் தேவை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டி எழுப்புவதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லை எனத் தெரிவித்த அவர், இதனால் கடன் உதவிகள் மூலமே இந்தப் பணிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

“இதனை அங்கீகரிக்காத எதிர்க்கட்சிகள் அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கியிடமிருந்து, சீனாவிடமிருந்து, இந்தியாவிடமிருந்து அதிகளவு கடன் பெற்றிருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கடன் பெற வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என தனது உரையில் கூட்டிக் காட்டியார்.

பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற் கொண்டிருப்பதனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அவற்றைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இருபத்துமூன்று வருடங்களுக்குப் பின்னர், இன்று சனிக்கிழமை (14.08.13) கிளிநொச்சியைச் நோக்கி ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் முதலாவது பயணிகள் புகையிரத சேவையை தொடர்ந்து கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் நாள்தோறும் மூன்று சேவைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு முற்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி புகையிரத நிலைய இன்றைய திறப்பு விழா விழாவில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, இலங்கைக்கான இந்தியத்தூதுவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதே வேளை அண்மையில் யாழ் தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஸ மக்கள் அரசாங்கத்தை நிராகரித்தால் வடக்கின் வசந்தத்தில் இருந்து விலக வேண்டி வரும் என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply