“வெற்றிலைக்கு வாக்களித்தால் வீடும் வீதியும் தருவோம்” கிளிநொச்சியில் தேர்தல் வியாபாரம் களைகட்டியது

yarldevi3அரசாங்கத்திற்கு நீங்கள் வாக்களித்தால்தான் எதுவும் கிடைக்கும். உங்கள் நலனுக்காகவே ஜனாபதி மகிந்த ராஜபக்ச ஏ-9 பாதையை திருத்தி யாழ் தேவி ரயிலை ஓட வைத்திருக்கிறார். எனவே வெற்றிலைக்கு நீங்கள் வாக்களித்தால்தான் உங்களுக்கு வீடும் வீதிகளும் திருத்தித் தரப்படும் என்று ஸ்ரீலங்கா சுகந்திக்கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.

கிளிநொச்சியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று தற்காலிக வீடுகளில் உள்ள மக்களைப் பார்த்து இவ்வாறான வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றார். அரசாங்கம் மாகாண சபையை கைப்பற்றா விட்டால் கூட்டமைப்பின் மாகாண சபை ஊடாக எதையும் நீங்கள் பெற முடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் வடக்கு மக்கள்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுதான் ஏ-9 பாதையும் யாழ் தேவி ரயிலும் எனத் தெரிவிக்கும் ஸ்ரீலங்கா சுகந்திக்கட்சி ஆதரவாளர்கள் நீங்கள் தற்பொழுது வசிக்கும் தற்காலிக கொட்டகைகளிலிருந்து கல் வீடுகளுக்குச் செல்ல வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி தெரிவிக்கின்றனர்.

அரசு பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களையும் நலத் திட்டங்களையும் முன்னெடுத்த பொழுதும் வேலை வாய்ப்புக்களை வழங்கிய பொழுதும் நன்மைகளைப் பெற்ற மக்கள் இறுதியில் கூட்டமைப்புக்கு வாக்களித்து விடுவதாகவும் இம்முறை வாக்களித்தால் இனிமேல் அரசின் நன்மைகள் கிட்டாது எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சில கிராமங்களுக்குச் செல்லும் குறித்த கட்சியினர் தற்பொழுது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் காரணமாகவே அரசாங்கம் கிராமங்களை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைமையில் உள்ளது என்றும் தேர்தல் முடிந்ததும் மாகாண சபையைக் கைப்பற்றி அபிவிருத்தி நன்மைகளை தரும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

GTN-

Tags: , ,

Leave a Reply