மிருசுவில் படுகொலைதாரியின் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில், எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை, பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ததற்கு எதிராக, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி, வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க கடந்த மாதம், 26ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையிலேயே, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறும், அதனை ரத்து செய்யுமாறும் கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சார்பில், சட்டத்தரணி கேசவன் சயந்தன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை இலத்திரனியல் கோவைப்படுத்தல் முறைமையூடாக நேற்று தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றில் வாதங்களை முன்வைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!