தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டை பிரிப்பதாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.
ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிளவுபடாமல், இணைந்த வட, கிழக்கில் சுயாட்சி அடிப்படையில் தமிழ் மக்களும் தமது இறைமையை பயன்படுத்தும் வகையில் அரசின் தீர்வுத் திட்டம் அமைய வேண்டும் என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – மட்டுவில் பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
´ஆட்சியாளர்களும், தீவிரவாத பெரும்பான்மையினரும் மக்களைக் குழப்பும் வகையிலான தவறான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
இவ்வாறான தவறான பிரசாரங்கள் ஊடாக தமிழ் மக்களை ஏமாற்றுவது கடினம். சர்வதேசத்தையும் அவர்கள் ஏமாற்ற முற்படுகிறார்கள். ஆனாலும் அது அவர்களால் முடியாது. அவ்வாறு ஏமாற்ற நினைப்பது தவறு என்பதையும் சுட்டிக்காட்ட விருப்புகின்றேன்.
அது மட்டுமன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை வரைவதற்கு விருப்பமில்லை. அவ்வாறான கருத்தை யாராவது முன்வைத்தால், அதற்கு எதிரான கருத்துக்களைக் கூறி அதனைக் குழப்ப முற்பட்டும் வருகிறார்.
இவ்வாறான நிலையில், கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ் மக்கள் ஆதரித்தால், அது தனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடும் என அவர் நினைப்பதாக எனக்குத் தோன்றுகிறது.´ என்றார்.
இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி. விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடமாகாண சபை வேட்பாளர் கேசவன் சஜந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
















