“எனக்கு முழு இலங்கையும் ஒன்றுதான். சிலர் பிரிந்து வாழ விரும்புகின்றனர். அதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. நாங்கள் சகோதர இனமாக வாழவேண்டும்”.
இவ்வாறு நேற்று கிளிநொச்சியில் தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிக்கான ரயில் சேவை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தெரிவித்தவைவருமாறு
நான் எத்தனையோ ஆண்டுகளின் பின்னர் கிளிநொச்சிக்கு யாழ். தேவி ரயிலில் வந்துள்ளேன். 30 வருடங்களாக அபிவிருத்தியில்லாமல் ஏற்பட்ட அழிவுகளை 4 வருடங்களில் கட்டியயழுப்பி இருக்கிறோம்.
போரினால் இழந்த உயிர்களை மட்டுமே எம்மால் மீளப்பெற் றுக் கொடுக்க முடியாது. அங்கவீனர் களைக்கூட சிகிச்சை செய்து குணப்படுத்தியுள்ளோம். இன்று உங்களுக்குப் புதிய ரயில் நிலையத்தைத் திறந்து வைத்துள்ளேன்.
தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாகத் தொலை பேசி அழைப்புகள் வருகின்றன. அவர்கள் கேட்கின்றனர், எங்களுக்கு உறுதியளித்தபடி எப்போது ரயில் நிலையங்கள் அமைத்துத் தரப்போகிறீர்கள் என்று!
எனது கிராமத்தைவிட உங்களது பிரதேசத்தையே கவனமெடுத்து அபிவிருத்தி செய்துள்ளேன். நாம்வீதியை அமைத்தால் அது சீனாவினுடையது என்கின்றனர். வைத்தியசாலையைக் கட்டினால் அது ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியில் அமைக்கப்பட்டது என்கின்றனர்.
ரயில் பாதை அமைத்தால் அது இந்தியாவினுடையது என்கின்றனர். நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சியினர் சொல்கின்றனர். பின்னர் சீனாவிடம் கடன், இந்தியாவிடம் கடன் என்றும் அவர்களே குற் றஞ்சாட்டுகின்றனர்.
எங்களிடம் பணம் இல்லை. பணம் இல்லாவிட்டால் கடன் வாங்கத்தானே வேண்டும். நாங்கள் அபிவிருத்திக்காகக் கடன்படுகின்றோம். காணிப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை என்பன வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இருக்கின்றது.
நான் மாஜா ஜாலவித்தை காட்டுபவன் போல் செயற்பட முடியாது. ஓரே நாளில் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சீர் செய்ய முடியாது.
இந்த வடமகாண சபைத் தேர் தலை நடத்துவது அரசின் வெற்றி. நீங்கள் பட்ட கஷ்ட, நஷ்டம் எல்லாம் எனக்குத் தெரியும்.
இன்று அந்த நிலைமை இல்லை. இனிமேல் ஒரு நாளும் அழிவு இல்லை. அபிவிருத்தியைப் பாதுகாக்க வேண்டும். ஜனநாயக வழியில் வாழ வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்பட வேண்டாம்.
பிரிவினை வாதம், பயங்கரவாதம் இனிமேல் வேண்டாம். சிலர் உங்கள் பிள்ளைகளைத் தவறான வழியில் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். பெற்றோர்கள் நீங்கள்தான் அவதானமாக இருக்க வேண்டும்.
இன்னும் பட்டதாரி நியமனம் வழங்குவோம். அத்துடன் உங்கள் விவசாயக் காணிகளைச் சுத்தம் செய்து தந்துள்ளோம். நான் உங்கள் தோழன், சொந்தக்காரன். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் என்னை நம்பலாம் என்றார்.
















