இலங்கைக்கு இந்தியா செக்; பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க முக்கிய 3 நிபந்தனைகள் விதிப்பு

indian_flagஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்தியா, கொழும்புக்கு முக்கிய மூன்று நிபந்தனைகளை முன்வைக்கவுள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

டில்லியின் இந்த கோரிக்கைகளுக்கு கொழும்பு பச்சைக் கொடிகாட்டினால் மாத்திரமே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பார் என்றும், இல்லையேல் அதை புறக்கணிப்பார் என்றும் தெரியவருகிறது.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத் தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதை தடுக்கும் வகையிலேயே டில்லியின் முதல் நிபந்தனை அமைந்துள்ளது.

அதாவது, அதிகாரக்குறைப்பு இடம் பெறக்கூடாது என்பதே முதல் நிபந்தனையாகும்.
அடுத்ததாக, இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையானது இந்திய மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியாக மாறியுள்ளது.

இதனால் அந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையிலேயே இரண்டாவது நிபந்தனை அமைந்துள்ளது. வடக்கு இலங்கையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கான கடுமையான சட்டங்கள் தளர்த்தப்பட வேண்டும் என்பதே இரண்டாவது நிபந்தனை.

அதேவேளை, சம்பூர் மின்நிலையம் தொடர்பிலான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவேண்டும் என்பது மூன்றாவது நிபந்தனையாகும். இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை அரச தரப்புடன் கலந்துரையாடுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான்குர்த் தலைமையில் இராஜதந்திர குழுவொன்று அடுத்த மாதம் முற்பகுதியில் இலங்கை வரவுள்ளது.

இந்தக் குழு இலங்கை தரப்புடன் மேற்படி நிபந்தனைகள் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர், அது தொடர்பிலான அறிக்கையயான்றை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கையளிக்கவுள்ளது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்தியாவின் இறுதி முடிவு அடையும் என்று டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுநலவாய மாநாட்டில் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் பங்கேற்கும் என இலங்கை அரசு அறிவித்திருந்தாலும், இந்தியா, கனடா, போன்ற நாடுகள் இன்னும் தமது முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply