ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிரும் யோசனையையே கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது: சுமந்திரன்

sumanthiran1ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர வேண்டும் என்பதையே வடமாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர வேண்டும் என்ற விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கு அப்பாலான எதுவும் அதில் உள்ளடக்கப்படவில்லை.

கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிய அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடக்கில் தனியான ஆட்சி குறித்த விடயங்கள் அதில் இருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் அப்படியான எந்த விடயங்களும் அதில் உள்ளடக்கப்படவில்லை.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தவறுகள் எதுவும் இல்லை. அது குறித்து கட்சி கொண்டுள்ள நிலைலைப்பாட்டிலும் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபனமானது 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணையானது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் படித்த புத்திசாலியான ஒருவரை முன்நிறுத்தி உள்ளதால் அரசாங்கம் கூட்டமைப்பின் மீது அரசாங்கம் இப்படியான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. தேர்தல் ஒன்றின் பொருத்தமான தகுதியான வேட்பாளர்களை நிறுத்த வேண்டியது அரசியல் கட்சி ஒன்றுக்கு இருக்கும் உரிமை. அரசாங்கத்தின் இந்த குற்றச்சாட்டானது அந்த உரிமையை அடக்குவதாகும்.

இலங்கையில் இருக்கும் ஏனைய கட்சிகளுக்கு உள்ள சிறப்புரிமைகள் கூட கூட்டமைப்புக்கு இல்லாமல் போயுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமிக்கும் போது அதிகார பரவலாக்கம் பற்றி கூறியிருந்தார்.

எது எப்படி இருந்தாலும் 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் ஐக்கிய நாட்டில் வடபகுதி மக்களுக்கு அரசாங்கம் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply