சைனீஸ் சோடியக் (சீனா 2012) என்ற ஒரே படத்தில் நடிகர், தயாரிப்பாளர், சண்டைப் பயிற்சி, ஒளிப்பதிவு, இயக்கம், பாடல் உள்ளிட்ட 15 வகையான பாத்திரங்களை வகித்தமை மற்றும் வாழும் நடிகர்களில் அதிக சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டவர் என்ற இரு பிரிவுகளிலேயே 2014ஆம் ஆண்டிற்கான கின்னஸ் புத்தகத்தில் ஜக்கி சான் இடம்பிடித்துள்ளார்.
ஹொங்கோங்கில் பிறந்த ஜக்கி சான் (59 வயது) தனது 6ஆவதிலிருந்தே திரைப்படத் துறையில் ஈடுபட்டுவருகின்றார்.
ஆரம்பத்தில் புரூஸ் லீயின் என்டதர் ட்ராகன் உள்ளிட்ட பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பின்னர் அதிரடி சண்டைக்காட்சிகள் மூலம் நாயகனாக அனைவர் மனதிலும் இடம்பிடித்தார்.
ஏராளமான திரைப்பட விருதுகளை வென்றுள்ள ஜக்கி சான் பல அறக்கட்டளைகளை ஆரம்பித்து ஏழைகளுக்கும் வாய்ப்பு வசதியற்றவர்களும் உதவிவருகின்றார். நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகள் கொண்ட ஆமர் ஒப் கோட், ரஷ் அவர், பொலிஸ் ஸ்டோரி, த மைத், ரம்பிள் இன் ப்ரோங்ஸ், ஹு எம் ஐ, த மெடலியன், எரௌன்ட் த வேர்ல் இன் 8 டேய்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஜக்கிசானின் இந்த உலக சாதனைக்கான பத்திரம் ஏற்கெனவே கடந்த வருடம் டிசெம்பர் மாதமளவில் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி வெளியான 2014ஆம் ஆண்டிற்கான உலகசாதனைப் புத்தகத்தில் ஜக்கி சான் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















