தெற்கிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்புக்கள் கொண்டுள்ள அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்கப்போவதாக மஹிந்த தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளும் புத்திஜீவிகளும் மீண்டும் இங்கு வந்து வாழவேண்டுமென்பதுடன் இங்கு வாழும் மக்களுக்காக அவர்களும் சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலையில் ‘பழைய சம்பவங்களை நாம் பேசுவது அர்த்தமும் அல்ல நல்லதுமல்ல. நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்;ந்தவர்கள். இந்த நாடு எல்லோருக்கும் சொந்தமான நாடு. அடுத்த வருடம் காங்கேசன்துறை வரையில் யாழ்.தேவி ரயில் சேவையை கொண்டு வருவோம். இனிமேல் அழிவுகள் வேண்டாம் அபிவிருத்தியே வேண்டும். இனவாதம் வேண்டாமென அவர் தெரிவித்தார்.
வழமை போலவே இலங்கையின் அனைத்து இடங்களிலும் மஹிந்த செய்து வரும் பிரச்சாரத்தை யாழ்ப்பாணத்திலும் அவர் கைவிட தயாராகவிருக்கவில்லை. அங்கும் போட்டுத்தாக்கிய மஹிந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பினரது பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழுகின்றனர். ஆனால் அப்பாவி மக்களின் பிள்ளைகள் இந்நாட்டில் வாழுகின்றனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பைச ;சேர்ந்த மாவை சேனாதிராசா இந்த நாட்டில் பிறந்தவர். பல காலம் அரசியலில் உள்ளார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவரை இந்த தேர்தலில் மறந்து விட்டது. அவருக்கு முக்கிய இடம்கொடுக்கவில்லை ஏனென்று எனக்குத் தெரியும்.
வடமாகாண சபைத் தேர்தலை நாம் வடக்கு மக்களுக்காகவே நடத்துகின்றோம் இதனூடாக வடபகுதி மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அதனூடாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர் என்பதுடன் இங்கு புத்திஜீவிகளோ கல்விமான்களோ இல்லையா என்றும் அதனால் தான் தென்னிலங்கையைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனரா என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி நான் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவியில் தான் வருவேன்” என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சுயேட்சைக்குழுக்களில் பங்கெடுத்திருந்த 6 பேர் இன்றைய தினம் மஹிந்த முன்னிலையில் ஆளும்கட்சியில் இணைந்து கொண்டனர். இதன்போது அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேம ஜயந்த, பாவித்திரா வன்னியராட்சி, றெஜினோல்ட் கூரே, பாராளுமன்ற உறுப்பினர்களான சில்வேஸ்திரி அலென்ரின் , அஸ்வர் ஆகியோரும் உடனிருந்தனர்.
















