தமிழ் மக்களை ஏமாற்றாத தீர்வை ஏற்கத் தயார்: தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பபாக சம்பந்தன் விளக்கம்

தமிழ் மக்களை ஏமாற்றும் தீர்வல்லாது மக்கள் ஏற்றுகொள்ளும் தீர்வினை அரசாங்கம் கொண்டுவந்தால் அதனை ஏற்று கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (15) முற்பகல் நடைபெற்றது.

அச் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

புலிகள் என்ன கேட்டார்களோ அதையே தமிழ் தேசிய கூட்டமைப்பும் கேட்கின்றது என ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் புலிகள் என்ன கேட்டார்கள் நாம் என்ன கேட்கின்றோம் என அவர் கூறவில்லை.

ஒரு நாட்டின் அரசியல் சாசணத்தில் அந் நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் அரசியல் பொருளாதார காலச்சார அபிலாசைகளை நிறைவேற்ற இடமுண்டு.

ஒருமித்த நாட்டுக்குள் பெரும்பான்மையினத்திற்கு அடிமையாக வாழாமால் எமது நாட்டில் எமது பிரதேசத்தில் கௌரவத்துடன் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு போதுமான அதிகாரங்களுடன் சுயாட்சியாக வாழவே விரும்புகின்றோம்.

நாம் என்றுமே தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சியோட வாழவே விரும்புகின்றோம்.

எனவே ஜனாதிபதி எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக வாசிக்க வேண்டும் தவறான கருத்துக்களை மக்களுக்கு கூற கூடாது.

இவ்வாறான கருத்துக்கள் மக்களை குழப்பும். அவை தமிழ் மக்களை குழப்பாது பெரும்பான்மையின மக்களையே குழப்பும்.

இற்றை வரைக்கும் அரசாங்கம் ஒரு அரசியல் தீர்வு திட்டத்தை மக்கள் மத்தியில் முன் வைக்கவில்லை எதனையும் மக்களிடம் கூறவில்லை.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் மக்களுக்கு என்ன செய்ய போகின்றோம் என் கூறியுள்ளோம். நீங்கள் மக்களிடம் என்ன கூறி வாக்கு கேட்கின்றீர்கள் எங்கே உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் ?

அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக இதுவரை நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மக்களுக்கு கூறமுடியுமா ?

எதையும் செய்யாமல் எதையும் மக்களிடம் கூறாமல் நாம் மக்களிடம் தெளிவாக கூறிய அறிக்கையை தவறாக மக்களிடம் கூறுவதை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது.

இணக்க அரசியலுக்கு எம்மை வருமாறு அழைகின்றனர். இது வரை இணக்க அரசியல் பேசியவர்கள் அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருப்பவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றார்கள்.

வலி வடக்கில 6,500 ஏக்கர் காணி பறிக்கப்பட்டுள்ளது. அது பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கும் காங்கேசன்துறை துறைமுக விஸ்தரிப்புக்குமே என மக்கள் மத்தியில் கூறுகின்றனர்.

ஆனால் அக் காணிகளை அங்குள்ள இராணுவ முகாம்களை நிரந்தரமாக்குவதற்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிக்கையில் வெளிவந்திருக்கின்றது.

அதேபோல இரணைமடுக்கு மேற்கு புறமாக 10,000 ஏக்கர் காணி கையகப்படுத்தி இராணுவத்தினருக்கு 10,000 வீடுகள் கட்டி கொடுக்கப்படவுள்ளன.

இவ்வாறாக இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகளில் விவசாயம், பழத்தோட்டம், செய்யப்படுகின்றன ஹோட்டல் கட்டப்படுகின்றன.

கேப்பபிளவில் மக்கள் சொந்த இடங்களில் குடியமர அனுமதிக்கப்படாமல் துரத்தப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்படுவதை தடுக்காது பார்த்து கொண்டு இருப்பது தான் இணக்க அரசியலா ? இதனை தான் நாங்களும் செய்ய வேண்டுமா?

இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் ஏமாற்றாத ஒரு தீர்வுத்திட்டத்தை முன் வைகுமேயானால் அந்த தீர்வுத்திட்டத்தை நாம் ஏற்று கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: , , , ,

Leave a Reply