கச்சதீவை மீட்கவும்; ம.தி.மு.க தீர்மானம்

vaiko2மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்தொழிலுக்குச் செல்லும் நமது தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வதும், அவர்களை கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்து சித்ரவதை செய்வதும், மீனவர்களின் உடைமைகளை நாசமாக்குவதும், அன்றாடச் செய்திகள் ஆகிவிட்டன.

இதுவரை 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் வேட்டையாடப்பட்டு உயிர் இழந்து உள்ளனர். இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சதீவை, தமிழக மீனவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்து உள்ளனர். இன்று கச்சதீவுக்கு அருகில் செல்லவும் முடியாத நிலைமையில் இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துகிறது.

இலங்கையின் அத்துமீறல்களை தட்டிக்கேட்க வேண்டிய இந்திய அரசு, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது என்று உபதேசிப்பதும், கச்சத்தீவு விவகாரம் முடிந்துவிட்டது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் டெல்லிக்கு வந்து கூறி இருப்பதை அப்படியே வழிமொழிவதும், இலங்கை இந்தியாவின் நட்புநாடு என்று இந்திய வெளியுறவு அமைச்சர் கூறுவதும் கடும்கண்டனத்துக்கு உரியதாகும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, உச்சநீதிமன்றத்தில் கச்சதீவு தொடர்பான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ‘கச்சதீவு எந்த நாட்டுக்கும் சொந்தம் இல்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கச்சதீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா-இலங்கை இடையே நீடித்து வந்தது.

அதைத்தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடற்பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்தபோது கச்சதீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது. இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் எந்த நாட்டுக்கும் கொடுக்கப்படவில்லை’ என்று, உண்மைக்கு மாறான தமிழகத்திற்கு பச்சைத் துரோகமான கருத்தைத் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply