தீவிரமடையும் கொரோனா: உலக அளவில் 4-ம் இடத்தை நோக்கி பயணிக்கும் இந்தியா!

உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு அமெரிக்கா அதிக இலக்காகி உள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20.6 லட்சத்துக்கும் கூடுதலானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 7.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 700க்கும் கூடுதலாக உள்ளது.

3வது இடத்தில் ரஷ்யா (பாதிப்பு எண்ணிக்கை 5.02 லட்சம்), 4வது இடத்தில் இங்கிலாந்து (பாதிப்பு எண்ணிக்கை 2.90 லட்சம்) மற்றும் 5வது இடத்தில் ஸ்பெயின் (பாதிப்பு எண்ணிக்கை 2.89 லட்சம்) ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்த வரிசையில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. நாட்டில் 2 லட்சத்து 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர்.

கடந்த 1ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 10 ஆயிரம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை இந்தியா சந்தித்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் 3ல் ஒரு பங்கு எண்ணிக்கை இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில் பதிவாகி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

தொடர்ந்து இந்த எண்ணிக்கை பதிவானால், இந்த வார இறுதிக்குள் 3 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்து இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி உலக அளவில் 4வது இடம் பிடிக்க கூடிய மோசநிலையை அடையும் சூழல் காணப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!