கூட்டமைப்பு வேட்பாளர்கள் ஆசி பெறுவதற்கும் தடை; இந்து குருமார் ஒன்றியத்தில் சம்பவம்

tnalogo2வடக்குத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இந்து மத குருமார்களிடம் ஆசிபெறுவதற்கும் நேற்று யாழ்ப்பாணத்தில் தடை விதிக்கப்பட்டது.

யாழ். சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத்துக்கு கூட்டமைப்பு வேட்பாளர்கள் ஆசிபெறச் சென்ற வேளை, அவர்களுக்கு ஆசி வழங்க விடாமல் இந்துக் குருமார்களை தடுத்து நிறுத்தியுள்ளார் யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரன்.

இந்தச் செயற்பாடானது மத சுதந்திரத்தை மழுங்கடிக்கும் நடவடிக்கை என்று சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் நேற்று நண்பகல் யாழ். பருத்தித்துறை வீதியில் உள்ள யாழ்.சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியத்தில் குருமார்களைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கமைய கூட்டமைப்பு வேட்பாளர் சிலர் இந்துக் குருமார் ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று நண்பகல் சென்றிருந்தனர். இந்த நேரத்தில் யாழ். பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரன் அங்கு வந்துள்ளார்.

“இந்துக் குருமார் ஒன்றியம் அமைந்துள்ள கட்டடம் அரசுக்குச் சொந்தமானது. எனவே தேர்தல் விதிகளின் படி அரச சொத்துக்களை பயன்படுத்த முடியாது. ஆகவே இங்கு வேட்பாளர்களுக்கு ஆசி வழங்க முடியாது. வேண்டும் என்றால் கோயிலுக்கு அழைத்துச் சென்று ஆசி வழங்குங்கள்” என்று இந்துக் குருக்களிடம் கூறிய பிரதேச செயலர், அங்கிருந்த வேட்பாளர்களையும் வெளியேறுமாறும் கூறினார்.

ஆயினும் இது ஒரு அரசியல் நிகழ்வு அல்ல. இது ஆசி வழங்கும் நிகழ்வு. ஆசி பெறுவதை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்று இந்து குருமார் பிரதேச செயலருக்கு எடுத்து விளக்கினர்.

ஒருவருக்கு ஆசி வழங்குவது குருக்களின் கடமை. அது எந்தக் கட்சியாக இருந்தாலும் நாங்கள் ஆசி வழங்குவோம் என்று குருமார்கள் மேலும் கூறினர். ஆயினும் சுகுணரதி தனது முடிவில் விடாப்பிடியாக இருந்தார்.

கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு அங்கு வைத்து ஆசி வழங்க முடியாது என்று அடித்துக் கூறிவிட்டார்.

இதனையடுத்து தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். சுகுணரதியின் இந்தச் செயல் வடக்கில் உள்ள இந்துக்களை அவமதிக்கும் நடவடிக்கை என்று சர்வதேச இந்துக்குருமார் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags: , , , ,

Leave a Reply