சேது சமுத்திர திட்டத்திலுள்ள சதிகளை அம்பலப்படுத்த வேண்டும்

veramaniசேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும் என்றும், அரசியல் நோக்கத்தோடு முட்டுக்கட்டை போடும் சக்திகளை அம்பலப்படுத்த பிரச்சாரம் செய்யப்படும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, திட்டமிட்டே மதவாத சக்திகளும், அரசியல் லாபம் எங்கே தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் தலைமையில் உள்ள அய்க்கிய முற்போக்குக்கூட்டணி அரசுக்கும் சென்றுவிடுமோ என்ற உள்நோக்கத்தோடு, சில பொருந்தாக் காரணங்களைக் கூறி, முன்னே கூறியதற்கு முற்றிலும் முரணாக அ.தி.மு.க. போன்ற கட்சியும், பார்ப்பன இந்துத்துவா கட்சிகளும் எதிர்த்து – உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெற்று, அய்ந்து ஆண்டுகளுக்குமுன்பே முடிந்து கப்பல்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டன!

ராமன் பாலம் எனும் கற்பனைப் பாலம்!

தமிழ்நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்புகள், தென்கிழக்காசியப் பகுதிகளில் வளர்ச்சி எல்லாம் இதன்மூலம் முடக்கப்பட்டன.

‘இராமர் பாலம்’ என்ற ஒரு கற்பனைக் கதையைக் கட்டிவிட்டு, மிகப்பெரிய தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டத்தைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன.

நீதிக்கட்சித் தலைவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் முதற்கொண்டு திட்டமிட்டு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போன்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் எல்லாம் தமிழக வாழ்வு முன்னேற்றம் – வளம் குறித்த இதுபோன்ற திட்டங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்!

நல் வாய்ப்பாக 2005 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் உள்ள ஆட்சி பதவிக்கு வரவிடாமல், தமிழ்நாடு – பாண்டிச்சேரியின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதால், 2006 ஆம் ஆண்டு சேது கால்வாய்த் திட்டம் தொடங்கப்பட்டது. அரசியல் உள்நோக்கம்

அய்.மு. கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்னேமாகன்சிங் அவர்களும் கலைஞர் அவர்களின் சீரிய இடைவிடாத வற்புறுத்தலால் மதுரைக்கு வந்து, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள் மிக விரைந்து செயல்படுத்திட முனைந்து – உழைத்து பெருமளவு வெற்றியும் பெற்றார்.

இந்தப் பெருமை தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்குச் சென்றடைவதா என்ற எரிச்சல் காரணமாகவே இதனைத் தடுத்திட பார்ப்பன – மதவெறிச் சக்திகளின் கூட்டு முனைப்போடு உச்சநீதிமன்றத்திற்குப் படையெடுத்து முடக்கியுள்ளனர்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அதே வழித்தடத்தில் நிறைவேற்றிட உறுதிபூண்டு, அமைச்சரவையில் முடிவெடுத்து, உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது – மிகவும் வரவேற்கத்தக்கது. என தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply