நான் வெறுமனே விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலனின் மனைவி என்பதற்கப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் தமிழர்களது குடும்பங்களது அடையாளமாக இருக்கின்றேன் என்பதே உண்மையாகும்.
ஆனால் இலங்கை அரசோ காணாமல் போனோர்களது நிலைபற்றி வாய் திறக்க மறுக்கின்ற அதே வேளை அதற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி வாய் மூட வைக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் அனந்தி சசிதரன் (எழிலன்). யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
அதற்கும் அசராவிடின் எம்மை போன்ற செயற்பாட்டாளர்கள் மீது சேறு பூசுவதில் அரச இயந்திரம் முனைப்பு காட்டுவதாக தெரிவித்த அவர் அற்ப சொற்ப சலுகைகளிற்காக் சோரம் போகின்றவர்களாக தமிழ் மக்களை அடையாளப்படுத்த அரச இயந்திரம் முற்படுவதாகவும் தெரிவித்தார்.
எனினும் அரசின் இத்தகைய போலிப் பிரச்சாரங்களை மக்கள் நம்புவதில்லையென தெரிவித்த அவர் எமது போராட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளை கொச்சைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் மக்களாலேயே முறியடிக்கப்பட்டு வருகின்றமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே ஆளும் தரப்பு தனது முப்படைகளையும் எடுபிடிகளையும் இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபடுத்துவதாக தெரிவித்த அவர் எனினும் காணாமல் போயுள்ளவர்களது குடும்பங்கள் சிந்தும் கண்ணீர் உலகை உலுக்கி நிச்சயம் நீதியை பெற்றுத்தருமென தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்நகரப்பகுதியில் இரவு வேளையில் அனந்தியை தனிப்பட்ட ரீதியில் குறறம் சாட்டி படையினர் பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
















