நீதிமன்றத்தின் ஆஜராகாத காரணத்தினால் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு களுத்துறை நீதவான் அருண அலுத்கே காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதுடன் அதற்கான பிடிவிராந்தையும் பிறப்பித்துள்ளார்.
மாகல்கந்தே பஞ்ஞாலோக்க தேரர், மதகல்கந்தே சுதந்த தேரர், சோபித தேரர் ஆகியோர் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட ஏனைய பிக்குமாராவர். சிங்கள ராவய அமைப்பின் புளியத்தே சுத்தம தேரர் உட்பட மூன்று தேரர்களும் இளைஞர், யுவதிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
2013-08-01 திகதி மக்கோன பிரதேசத்தில் சிங்கள ராவய கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டம் நடைபெற்றால் பிரதேசத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என பயாகல காவற்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கூட்டத்திற்கு தடைவிதித்தது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் தடையை மீறி கூட்டம் நடத்தப்பட்டதாக காவற்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை ஆராயந்;த நீதவான் அயோஷா ஆப்தீன் மேற்படி பிடிவிராந்தை பிறப்பித்துள்ளார்.
















