இணையம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இது. அகண்டு விரிந்த உலகம் இப்போது “குளோபல் வில்லேஜ்” என்று கூறப்படும் அளவில் இருக்கிறது. இணையம் இருந்தால் போதும் தாய் நாட்டில் இருந்து, சொந்த பந்தங்களை விட்டு விட்டு தூர தேசம் சென்றால் கூட பிரிவு துயர் அவ்வளவோ வாட்டுவதில்லை. காரணம் ஸ்கைப், பேஸ்புக், இத்யாதி இத்யாதி…..
இன்று உலகம் முழுவதும் இணையமும், இளைய சமுதாயமும் பிரிக்க முடியாத இணைப்பில் இருக்கின்றனர். ஆனால் இந்த வளர்ச்சியிலும் ஒரு சில பக்க விளைவுகள் இருக்கின்றன. பக்க விளைவுகள் அதீதமாகும் அதை கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
கன்றுக்குட்டி வயிறு நிரம்பியது கூட தெரியாமல் வயிறு முட்ட பால் அருந்தி விட்டு திணறுமாம். அதே போல் இன்றைய இளைஞர்கள் இணையம் முன் அமர்ந்தால் கால பேரம் தெரியாமல் கிரங்கிக் கிடக்கின்றனர். நெட் போதையில் இருக்கும் இளைஞர்களை மீட்டெடுக்க பல நாடுகள் முணைப்புடன் களமிறங்கியுள்ளன.
காலை எழுந்தவுடன் பெட் காஃபி இல்லை நெட் காஃபி தான் இளசுகளின் இன்றியமையா தேவை. கண் விழித்துவுடன் நெட் தேடும் இவர்களை ஒரு நாள் முழுவதும் இணையம் பார்க்க விடாமல் பட்டினி போட்டால்? இது தான் நெட் ஃபாஸ்டிங்.
ஜப்பான் நாட்டின் தொழிலாளர் நல வாரிய அமைச்சகம் நடத்திய ஒரு ஆய்வில் அவர்கள் நாட்டில் 5 லட்சத்து 18 ஆயிரம் இளைஞர்கள் இணையத்திற்கு அடிமையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த நிதியாண்டு முதல் நாடு முழுவதும் நெட் பாஸ்டிங் கேம்ப் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாம்.
இந்த நெட் ஃபாஸ்டிங் மையங்களில் துவக்கப் பள்ளி முதல் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் வரை யார் வேண்டுமானாலும் வாரத்தில் ஒரு நாள் தங்கலாம். அங்கு இணையம் இருக்காது. சூரிய குளியல், வாலிபால் விளையாட்டு என நாள் முழுவதும் பொழுதைப் போக்கலாம். இன்டர்நெட் இல்லாமல் அங்கு வரும் குழந்தைகளும், இளைஞர்களும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அறிவியல் தரும் சவுகரியங்களை, சலுகைகளை மனிதன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் தவறினால் அதன் பிடிக்குள் மனிதன் விழுந்துவிடுவான்.பின்னர் மீண்டெழுவது மிகவும் சிக்கலாகி விடும். நேரத்தை வீணாக்குவது குற்றம். அதுவே தொடர்ந்தால் அது தான் கிரிமினல் வேஸ்ட் ஆஃப் டைம் என்பார்கள்.
ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டிய வயதில், இணையம் வாயிலாக கண்டதையும் பார்த்தும், கேட்டும், பழகியும் பொன்னான காலத்தை
பொசுக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்டெடுக்க வேண்டியது அவசியம் தான். “விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்” என்ற பட்டுக்கோட்டையார் பாடியது தான் நினைவுக்கு வருகிறது.
















