புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி: 120 கி.மீ சைக்கிளில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கணவன் – பின்னர் நடந்த சம்பவம்!

தமிழகத்தில் கணவருடன் 120 கி.மீற்றர் சைக்கிளில் சென்று சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(60). கூலித் தொழிலாளியான இவர் மஞ்சுளா(44) என்பவரை இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு விஷ்ணு என்ற 12 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், மஞ்சுளாவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன், இடது தாடை அருகே, கன்னத்தில் புற்றுநோய் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 25-ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், மஞ்சுளா வலியால் துடித்து வந்துள்ளார். மனைவியின் வேதனையை தாங்க முடியாமல், அறிவழகன் அதே மாதம் 29-ஆம் திகதி தன்னுடைய பழைய சைக்கிளில்,மனைவியை அமர வைத்து 120 கி.மீற்றர் தூரமுள்ள புதுச்சேரிக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.

சிகிச்சை முடிந்து, ஆம்புலன்சில் ஊர் திரும்பிய, அறிவழகனின் செயலை பலரும் பாராட்டினர். மேலும், அவருக்கு பலரும் பணம், பொருள் உதவி செய்தனர். இந்நிலையில், வீட்டிலிருந்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்த மஞ்சுளா, நேற்று காலை திடீரென உயிரிழந்தார்.

ஊரடங்கால், வேலை இல்லாமல் போன நிலையிலும், போக்குவரத்து தடை செய்யப்பட்ட போதும், வலியால் துடித்த மனைவியை சைக்கிளிலேயே அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும், காப்பாற்ற முடியாமல் பறி கொடுத்து விட்டேன் என்று அறிவழகன் கதறி அழுதுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!