தனது பானமொன்றின் போத்தல் மூடியின் அடிப்பாகத்தில் ‘YOU RETARD’ என எழுதப்பட்டிருந்தமைக்காக கொக்கா கோலா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
உலகின் மிகப்பெரிய மென்பான நிறுவனமான கொக்கா கோலா குழுமத்தின் அங்கத்துவ நிறுவனங்களில் ஒன்றான விற்றமின்வோட்டர் நிறுவனம் கனடாவில் தனது மினரல்வோட்டர்களுக்கு ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்திருந்தது.
மேற்படி போத்தல் மூடிகளின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு வேடிக்கையான வாசகங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் போட்டி.
இந்நிலையில் கனடாவின் எட்மன்டன் நகரிலுள்ள உணவகமொன்றில் தனது கணவர் சகிதம் உணவருந்திக் கொண்டிருந்த லோத்தஸ் எனும் பெண், தான் வாங்கிய மினரவல்வோட்டர் போத்தலின் மூடியின் அடியில் ‘YOU RETARD ‘ என குறப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது திட்டும் வகையிலான வெறுப்பூட்டக்கூடிய, பயன்படுத்தத தகாத சொல்லாக் கருதப்படுகிறது.
தனது இளைய சகோதரி நோய்வாய்ப்பட்டுள்ளதால் இச்சொற்கள் தனக்கு ஊறு ஏற்படுத்துவதாக அமைந்தது என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து லோத்தஸின் கணவர் விற்றமின் வோட்டர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கொக்கா கோலா நிறுவனத்துக்கு நீண்ட கடிதமொன்றை எழுதினார். அதையடுத்து கொக்காக கோலா நிறுவனம் மேற்படி சொற்களை மூடியில் பொறித்தமைக்காக மன்னிப்பு கோரியுள்ளது.
‘இதை எம்மால் நம்ப முடியாமல் இருந்தது. இது வேடிக்கைக்காக செய்யப்பட்டிருக்கலாம் அல்லது மோசமான ஊழியர் எவரினதும் வேலையாக இருக்கலாம் என எண்ணினோம்’ என லோத்தஸ் தெரிவித்துள்ளார்.
கொக்கா கோலா ரிபிரெஷ்மென்ட்ஸ் கனடா நிறுவனத்தின் வர்த்தக நாம தொடர்பாடல் பணிப்பாளான ஷெனோன் டெனி இது குறித்து கூறுகையில், மேற்படி ஊக்குவிப்புத் திட்டத்துக்கான சொற்களை ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட்டநிலையில் இத்தவறு இடம்பெற்றுவிட்டதாக கூறியுள்ளார்.
பிரெஞ்சு மொழியில் இதற்கு தாமதம் என்று மாத்திரமே அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார். சில சொற்கள் பிரெஞ்சு மொழியில் சாதாரண சொற்களாகவும் ஆனால் ஆங்கிலக் கோணத்தில் பார்த்தால் தீங்கேற்படுத்துவதாகவும் அமைகின்றன. இந்த ஊக்குவிப்புத்திட்டதுக்கான சொற்களுக்கு இரு மொழிகளிலும் தனித்தனியாகவே அங்கீகாரம் வழங்கப்படுகிறது என அவர் விளக்கியுள்ளார்.
இந்த சர்ச்சையை காரணமாக குறித்த சொற்கள் பொறித்த மூடிகளை அழித்துவிடுவதற்கு தமது நிறுவனம் தீர்மானித்துள்ளதுடன் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தையும் நிறுத்தியுள்ளதாக ஷெனோன் டெனி கூறியுள்ளார்.
















