காவிரியைக் கொண்டு வருவதற்கான அக்கறை போராடுபவர்களிடம் இல்லை: – சொல்கிறார் தமிழிசை

காவிரியைக் கொண்டுவருவதற்கான அக்கறை பா.ஜ.க-விடம் தான் உள்ளது போராடுபவர்களிடம் இல்லை எனத் தமிழிசை தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், காவிரி வாரியம் அமைக்ககோரும் வகையில் உலக கவனத்தை ஈர்க்க ஐ.பி.எல் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டுமெனத் தமிழ் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கின. ஆனால் இதற்கு ஐ.பி.எல் நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கவே, இன்று நடந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.

போராட்டத்தால் மைதானத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு மாதத்தில் காவிரி பிரச்னையில் தீர்வு ஏற்படும். திமுக, காங்கிரஸ் கூட்டணி காவிரி விவகாரத்தில் வஞ்சித்த போது உங்களுக்கு உணர்ச்சி ஏற்படவில்லையா. போராட்டத்தால் காவிரியை கொண்டுவர முடியாது. காவிரியைக் தமிழகம் கொண்டுவருவதற்கான அக்கறை பா.ஜ.க-விடமும், மத்திய அரசிடமும் தான் உள்ளது. போராடுபவர்களிடம் இல்லை. போராட்டத்தால் உணர்ச்சி கொந்தளிப்பை மட்டுமே ஏற்படுத்த முடியும். நியூட்ரினோ திட்டத்தில் விவசாயம், பயங்கரவாத கண்காணிப்பு என பல்வேறு நன்மைகள் உள்ளன” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!