மீனவர்களை விடுவிக்காவிடில் தேர்தல் புறக்கணிக்கப்படும்

fishermen2தமிழகம், புதுச்சேரி மீனவர்களை விசைப் படகுகளுடன் விடுவிக்காவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று நாகையில் நடைபெற்ற 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 65 மீனவர்கள் 9 விசைப்படகுகளில் கடந்த ஜூலை 30–ம் திகதி நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 19-ம் திகதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாகை, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை ஆகிய 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நாகையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நாகை அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

இலங்கை சிறையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களின் விசைப் படகுகளுடன் வருகிற 25-ம் திகதிக்குள் விடுதலை செய்ய இந்திய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், விசைப் படகுகளையும் மீட்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கை மற்றும் தமிழக மீனவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மேலும் இப்பிரச்சினை குறித்து பிரதமரையும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும் மீனவ பிரதிநிதிகள் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, இந்த பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணாத நிலையில் நாகை, காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் வருகிற 27–ம் திகதி விசைப்படகுகளில் வெள்ளைக் கொடி ஏந்தி இலங்கையில் தஞ்சம் அடைவது,

வருகிற பாராளுமன்றத் தேர்தலை 6 மாவட்ட மீனவர்களும் புறக்கணிப்பது, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கடலோர மாவட்ட மீனவர்களையும் ஒருங்கிணைத்து தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தேசிய மீனவர் பேரவை பொது செயலாளர் இளங்கோ, தமிழக கடலோர விசைப் படகு மீனவர்கள் சங்க பொது செயலாளர் போஸ், ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க தலைவர் அல்போன்ஸ், மண்டபம் அருளானந்தம் உள்பட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply