தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிக்கவேண்டும் எனவும் யுத்தத்திற்குப் பின்னர் எமக்காக இந்த அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திடம் ஏமாறமுடியாது என வடக்குத் தேர்தலில் வாக்களித்த பின் மக்கள் தெரிவித்தனர்.
நாம் இத்தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்துள்ளோம். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இறுதி யுத்தத்தின் போது நாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து எமது உடமைகளை எடுத்துவரவில்லை. அதனை இந்த அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இவ்வாறு போரால் பாதிப்படைந்துள்ள எமக்கான வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் இந்த அரசாங்கம் எதையுமே வழங்கவில்லை. அபிவிருத்தி எனக் கூறி வீதிகளை மட்டுமே போடுகின்றனர் எனவும் குறிப்பட்டனர்.
எமது பொருளாதார முன்னேற்றத்திற்கு எதுவுமே இந்த அரசாங்கத்தால் செய்யப்படவில்லை. தற்பொழுதும் அபிவிருத்திகளைக் காட்டி எம்மை ஏமாற்றுகின்றனர். இதனால் எமக்கான நிரந்தரமான அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளோம் என்றனர் மக்கள்.
















