வடக்கு மாகாணத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக பெரு வெற்றியைப் பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
மொத்தமுள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 7 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஓர் ஆசனத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கைப்பற்றியுள்ளன.
30 ஆசனங்களைப் பெற்றதால் மூன்றில் இரண்டு பெரும்பான் மையோடு தமிழர்களின் தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
வடக்கின் எல்லாத் தொகுதிகளிலும் அமோக வெற்றியீட்டி சரித்திரச் சாதனை படைத்த கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் 3,49,992 வாக்குகள் கிடைத்துள்ளன.
பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பல்லாயிரக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வென்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 27, 620 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 195 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 30 வாக்குகளையும் பெற்றுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 36, 323 வாக்குளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7,737 வாக்குகளையும், ஈழவர் விடுதலை முன்னணி 300 வாக்குகளையும், ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு 60 வாக்குகளையும் பெற்றன.
வவுனியா மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 40,324 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 16, 310 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1967 வாக்குகளையும் பெற்றன.
மன்னாரில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 31, 818 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14,696 வாக்குளையும், ஐக்கிய தேசியக் கட்சி 180 வாக்குகளையும் பெற்றன.
யாழ்.மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 213, 907 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 35, 995 வாக்குளையும், ஐக்கிய தேசியக் கட்சி 855 வாக்குகளையும் பெற்றன.
















