வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி தீர்வுக்கே தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பதனை இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் எந்த தேர்தல் நடந்தாலும் அதில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி தீர்வுக்கே ஆணை வழங்கியுள்ளனர்.
அது பாராளுமன்ற தேர்தல், மாகாணசபை தேர்தல் அல்லது வேறு எந்த தேர்தலானாலும் சரி வடகிழக்கு தமிழர்கள் தங்களுக்கான சுயாட்சி தீர்வையே திரும்ப திரும்ப வேண்டி நிற்கின்றனர் என்பதை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் புரிந்துகொண்டு தமிழர்களுக்கான தீர்வை பெற்றுத்தர முன்வர வேண்டும்.
தந்தை செல்வா காலம் தொடங்கி வரதராஜபெருமாள் அவர்கள் முதலமைச்சரான காலம் வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ஒரே விடயத்தையே வலியுறுத்தி வந்துள்ளனர்.
தமிழ் மக்கள் கோருவது தங்களது நிலத்தை தாங்களே ஆளக்கூடிய ஒரு அரசியல் தீர்வையே. அந்த வகையிலேயே 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ள இந்த வடமாகாணசபை தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தங்களுக்கான நியாயமான சுயாட்சி தீர்வை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















