150 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்: திகைக்க வைக்கும் காரணம்!

சீர்காழி அருகே பெரம்பூரில் வவ்வால்களை பாதுகாக்க 150 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் இருந்து வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பெரம்பூர் கிராமம். விவசாயம் நிறைந்த இந்தக் கிராமத்தின் நடுவே 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலமரம் ஒன்று வேரூன்றி நிமிர்ந்து நிற்கிறது.

இதில் பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன. வவ்வால்களை பாதுகாக்க இளைஞர்கள் கொண்ட வேட்டை தடுப்பு குழு ஒன்றை கிராமமக்கள் அமைத்துள்ளனர். மேலும், சத்தம் கேட்டு வவ்வால்களுக்கு பாதிப்பு ஏற்படும் காரணத்தினால் தீபாவளி தினத்தன்று கிராம மக்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை.

பட்டாசு சப்தத்தால் வவ்வால்கள் அச்சமடையும் என்பதால் பல ஆண்டுகளாக இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால், அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்றுதான் வெடிக்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடும் அங்கு நிலவி வருகிறது.

இந்த வவ்வால்கள் வசிக்கும் பகுதிக்கு கிராமமக்கள் அனுமதியின்றி வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாது. இவர்கள் வவ்வால்களை தங்கள் கிராமத்தை காக்கும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கி இருப்பதால், இப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. வக்கா, நீர் காக்கா, பூநாரை, வெள்ளை காக்கா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இங்கு வர தொடங்கியுள்ளதால் அவற்றையும் பாதுகாத்து பராமரித்து வருகின்றனர் பெரம்பூர் கிராமக்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!