வடக்கில் இராணுவத்தின் அடக்கு முறைகளும் அராஜக செயற்பாடுகளுமே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வழிகோலியுள்ளது; ஜே.வி.பி

tilvin-silva-jvpவடக்கில் இராணுவத்தின் அடக்கு முறைகளும் அராஜக செயற்பாடுகளுமே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வழிகோலியுள்ளது. வடக்கில் இனி நடக்கவிருக்கும் பிரிவினைவாத போராட்டத்திற்கு அரசாங்கம் முகம் கொடுக்கத் தயாராக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு அரசாங்கமே காரணம். இதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் நேற்று மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தல் ஜனநாயக ரீதியில் சாதாரணமாக நடைபெற்றதல்ல, எனவே இதை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியென குறிப்பிட முடியாது.

யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளிலும் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் எந்தவொரு நன்மைகளையும் செய்யவில்லை. மாறாக இராணுவ அடக்கு முறைகளையும் கட்டுப்பாடுகளையும் நடத்தி மோசமானதொரு இராணுவ ஆட்சியினையே நடத்தி வந்துள்ளது. எனவே இம்முறை வடமாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் சரிவர பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழர்களின் விருப்பத்தையும் தமது நிலைப்பாட்டினையும் இம்முறை வெளிப்படுத்தி விட்டனர். ஆகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் வரலாற்று வெற்றியினைக் காண அரசாங்கத்தின் அராஜக செயற்பாடுகளே காரணமாகும்.

Tags: , ,

Leave a Reply