மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பின் சிற்றரசி உலக நாச்சியாரின் சிலையினை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த சிலைக்கு அருகில் இருந்து சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் ஓட்டமாவடி பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் அவர் கைதுசெய்யப்படும்போது தன்னை ஒரு தமிழராகவும் ஆரையம்பதி பிரதேசத்தினை சேர்ந்தவராகவும் காட்டமுனைந்ததாகவும் எனினும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது வேறு ஒரு பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரியவந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆரையம்பதி பிரதான வீதியில் சமூகப் பெரியார்களின் திருவுருவச்சிலைகள் தமிழர்களின் கலாசாரப் பின்னணியுடன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கபட்டுள்ளது.
இதில் கி.மு 513ம் ஆண்டளவில் மண்முணையினை தளமாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்த உலக நாச்சியார் மட்டக்களப்பின் முதலாவது சிற்றரசி என்பதனால் அவரினை நினைவு கூறும் முகமாக திருவுருவச்சிலை ஆரையம்பதி பொதுச் சந்தைக்கு முன் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சிலையின் வாள்பிடித்துள்ள கைப்பகுதி சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையினை குறித்த நபர் சேதமாக்கிக்கொண்டிருக்கும்போதே பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்ததாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்றே 2012.01.10ஆம் திகதி நள்ளிரவில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையும் உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















