தீர்வு காணப்படுமா? – விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை!

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு 3 புதிய சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு போன்றவற்றை ஒழித்துவிடும் எனவும், விவசாய துறையை பெரு முதலாளிகளுக்கு தாரை வார்த்துவிடும் எனவும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியின் எல்லைப்பகுதிகளை ஆக்கிரமித்து அவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 34-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. போக்குவரத்து முடக்கத்தால் டெல்லிவாசிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு ஏற்கனவே 5 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. மேலும் உள்துறை மந்திரி அமித்ஷாவை ஒருமுறை விவசாய பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எத்தகைய முடிவும் எடுக்கப்படவில்லை. 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதிலேயே விவசாயிகள் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

இதைத்தொடர்ந்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது. அதன்பேரில் 29-ந்தேதி (நேற்று) பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக அரசுக்கு கடிதமும் எழுதினர்.

எனினும் இந்த பேச்சுவார்த்தையை இன்று (புதன்கிழமை) நடத்துவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பும் விடுத்துள்ளது. இது தொடர்பாக சுமார் 40 அமைப்புகளுக்கு மத்திய வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி இரு தரப்பினரிடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் தீர்வு எட்டப்பட்டு விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா? என்று நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதற்கிடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், 3 சட்டங்களையும் திரும்பப்பெறுவதற்கான வழிமுறைகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உறுதி போன்றவை இந்த பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரலில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என விவசாயிகள் நிபந்தனை விதித்து உள்ளனர்.

மேலும் விவசாயிகளின் நலன் கருதி மின்சார திருத்த சட்டம் 2020-ஐ திரும்பப்பெறுவது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் குறிப்பிட்டு உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு விவசாயிகள் நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.

முன்னதாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இன்று சிங்கு, திக்ரி பகுதிகளில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துவதையொட்டி அந்த பேரணியை அவர்கள் ஒத்திவைத்துள்ளனர்.

இதனால் அரசுடனான பேச்சுவார்த்தைக்கு எந்தவித இடர்பாடுகளும் நேராது எனக்கூறியுள்ள விவசாயிகள், இந்த பேரணியை நாளை (வியாழக்கிழமை) நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளனர். இதற்கிடைய டெல்லியின் சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு வசதியாக இலவச ‘வை-பை’ அமைக்க ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். எனவே அவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக இலவச ‘வை-பை’ அமைக்க உள்ளோம்.

இதற்காக சில பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒரு முயற்சி ஆகும்’ என்று கூறினார். வை-பைக்கான தேவை அதிகரித்தால் மேலும் நிறுவப்படும் எனவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!