கோவை அருகே 8.5 ஏக்கர் பரப்பில் உருவாகும் பிரம்மாண்ட ‘தேசபக்திக் கோட்டை’!

தேசப்பற்றை இளைய தலைமுறையினரிடம் விதைக்கும் வகையில், கோவை அருகே, 8.5 ஏக்கர் பரப்பில், ‘தேசபக்திக் கோட்டை’ எனும் பிரமாண்டமான கண்காட்சி வளாகம் தயாராகி வருகிறது.கோவை, இனி தேசப்பற்றுக்கான ஒரு நிரந்தர அடையாளத்தை பெறப்போகிறது. கோவை – பாலக்காடு ரோட்டில், கந்தே கவுண்டன்சாவடி பகுதியில், 8.5 ஏக்கர் பரப்பில், ‘தேசபக்திக்கோட்டை’ என்ற பிரமாண்டமான கண்காட்சி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

‘ஜெய்ஹிந்த்’ அறக்கட்டளை, இந்த கோட்டையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.கோவையில் 3.5 கி.மீ., நீள தேசியக்கொடியை அமைத்தது; 126 சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் பிரமாண்ட புகைப்படக் கண்காட்சி நடத்தியது; ‘தினமலர்’ நாளிதழுடன் இணைந்து, ‘என் தேசம் என் சுவாசம்’ என்ற சுதந்திர தினக் கட்டுரைப் போட்டியை நடத்தி, லட்சம் ரூபாய் பரிசு வழங்கியது என, நாட்டுப்பற்று, தேச ஒருமைப்பாட்டுக்காக இந்த அமைப்பு, பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இதன் அடுத்த முயற்சியாக, இந்த ‘தேசபக்தி கோட்டை’யை அமைத்து வருகிறது.தியாகிகள் கவுவரம்தேச விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த, சிறை சென்ற தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கவுரவிப்பதும், இளைய தலைமுறையினரிடம் தேசப்பற்றை வளர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்வதுமே இந்த தேசபக்திக் கோட்டை அமைப்பதன் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் தலைவர் நந்தகுமார் கூறியதாவது:காந்தி, நேரு, படேல், பாரதியார், வ.உ.சிதம்பரம் என நமக்கு தெரிந்த தேசத்தலைவர்களின் எண்ணிக்கை, 50க்கும் குறைவாகவே இருக்கும். தேச விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த எத்தனையோ தலைவர்களின் வரலாறும், அவர்களின் தியாகமும் பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரிவதில்லை. அத்தகைய தலைவர்கள், தியாகிகள் அனைவரையும் கண்டறிந்து கவுரவிப்பதே, இந்த தேசபக்திக் கோட்டை அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்.

மொத்தம், 25 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த கண்காட்சி வளாகம் அமைக்கப்படுகிறது. இதுவரை, 175 சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் புகைப்படங்கள், வரலாறு சேகரிக்கப்பட்டு, அவற்றை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நான்கு புறமும் இந்தத் தலைவர்களின் புகைப்படங்கள் அமைக்கப்படும்.

நடுவில் அமைக்கப்படும் பெரிய மேடையில் மகாத்மா காந்தியின் திருவுருவமும், அவருடைய பொன்மொழிகளும் இடம் பெறும். இந்த மேடையில் தேசப்பற்றை வளர்த்தெடுக்கும் வகையிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், ஒளி-ஒலி காட்சி நடத்தப்படும்.ராட்சத ராட்டைசுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இடங்களின் மினியேச்சர்கள் அமைக்கப்படும். கோட்டையின் முகப்புப் பகுதி, டில்லி செங்கோட்டை வடிவிலேயே அமைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலிருந்து சிறப்பு ‘ஆர்டர்’ கொடுத்து இதற்கான சிகப்பு மற்றும் தேசியக்கொடி டைல்ஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த தேசபக்திக் கோட்டையைப் பார்வையிட நுழைவுக்கட்டணம் கிடையாது.

இங்கு வருகை தரும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு தேசப்பற்று, சுற்றுச்சூழல், யோகா வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும். இதே வளாகத்தில், 1947 தியாகிகளின் பெயர்களில், 1947 பழமரக்கன்றுகள் வைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர், இந்த ‘தேசபக்தி கோட்டை’யை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில், 51 அடி நீளம், 33 அடி உயரம், 27 அடி அகலத்தில் ராட்சத ராட்டை அமைக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடித்துத் திறப்பதற்கு முயற்சி செய்கிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.தேசபக்திக்கோட்டையும், ராட்சத ராட்டையும் கோவையின் புதிய அடையாளமாக மாறுவது நிச்சயம்.தியாகி குடும்பங்களுக்கு அழைப்பு! வரும் ஜன.,26ல் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்த வளாகத்தில் உள்ள, 4.5 ஏக்கர் பரப்பில் 1,947 பழமரக்கன்றுகள் நடப்படவுள்ளன. மா, பலா, கொய்யா, சப்போட்டா போன்ற பழமரக் கன்றுகளை, ‘உயிரின் சுவாசம்’ அமைப்பு நடவுள்ளது.

ஒவ்வொரு பழமரத்துக்கும் ஒரு தியாகியின் பெயரை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சுதந்திரப் போராட்ட தியாகிகள் அல்லது அவர்களின் வாரிசுகள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களுடைய முன்னோர் நினைவாக பழமரக்கன்று நடலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!