இலங்கை இனப் படுகொலை தொடர்பாகச் சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்று ஐ.நா. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் அன்புமணி பங்கேற்று வருகிறார்.
ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது அமர்வில் அன்புமணி பேசியதாவது:-
இலங்கையில் தற்போதும் இனப்படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகும். இலங்கை வடக்கு மாநிலத்தில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்புகள் தமிழ்ப் பெண்கள் மிரட்டிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படும் தமிழ்ப் பெண்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்வது தொடர்பாக விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்தியுள்ளது.
கட்டாயக் கருத்தடையும், கருக்கலைப்பும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா.வால் விசாரிக்கப்பட வேண்டும்.
எனவே, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று அவர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
(தினமணி)
















