நாட்டின் 21 மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் 772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டின் 21 மாவட்டங்களில கடந்த 24 மணிநேரத்தில் 772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவற்றுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 189 பேர் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அவற்றுள் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இருந்து 24 பேரும் மட்டக்குளி பகுதியில் 28 பேரும் நாரஹேன்பிட்டி பகுதியில் 27 பேரும் கொள்ளுப்பிட்டியில் 23பேரும் கோட்டை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் தலா 13 பேரும் கிராண்ட்பாஸ் பகுதியில் 7 பேரும் கறுவாத்தோட்டம் பகுதியில் ஐவரும் கொம்பனித்தெரு வெள்ளவத்தை பொருளை ஆகிய பகுதிகளில் இருந்து மூவரும் ஏனையவர்கள் கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பூகொட பகுதியில் 31 பேரும் வத்தளை பகுதியில் 17 பேரும் நிட்டம்புவ பகுதியில் ஐவரும் ராகம பகுதியில் 10 பேரும் ஜா எல பகுதியில் 6 பேரும் ஏனையவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே களுத்துறை மாவட்டத்தில் 93 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 36 பேரும் குருணாகல் மாவட்டத்தில் 62 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 23 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 20 பேரும் கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்து 17 பேரும், காலி மாவட்டத்தில் 19 பேரும் மன்னார் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இருந்து 13 பேரும் நுவரெலியாவில் 8 பேரும் புத்தளம் பதுளை யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் 7 பேரும் நேற்றைய நாளில் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்

இதன்படி நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளதுடன் 52 ஆயிரத்து 565 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

மேலும் 7 ஆயிரத்து 838 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரை 290 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் நாடாளாவிய ரீதியில் முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 97 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 8 ஆயிரத்து 252 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும்’ கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

பசறை பிரதேசத்தில் மேலும் 10 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பசறை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் கடந்த 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட 215 பி.சி.ஆர் அறிக்கையின் பிரகாரம் குறித்த தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் உட்பட கொழும்பிலிருந்து வருகைத் தந்துள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே புத்தளம் பகுதியில் கொரோனா அச்சநிலைமை காரணமாக அரச வங்கியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த வங்கியின் முகாமையாளருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தொற்றாளருடன் தொடர்புடைய 12 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக பொலன்னறுவை லங்காபுர பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொழிற்சாலை ஊழியர்கள் 38 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் , 800க்கும் மேற்பட்டவர்கள் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!