3ஆவது இஸ்லாமிய ஐக்கிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் பலேம்பாங்க் நகரில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியுள்ளது. 46 நாடுகளைச் சேர்ந்த 1800 இற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றனர். ஒக்டோபர் முதலாம் திகதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தோனேஷிய ஜனாதிபதி சுசிலோ பாப்பாங் யுதொயோனோ ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இப்போட்டிகளில் பங்குபற்றும் எகிப்திய, சிரிய மற்றும் பலஸ்தீன குழவினருக்கு அவர் விசேட பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
“இஸ்லாமிய நாடுகள் ஐக்கியமாக வாழ முடியும் என்பதை இப்போட்டிகள் மூலம் உலகுக்கு நிரூபிப்போம்” என அவர் கூறினார்.
எனினும் இப்போட்டிகளில் பங்குபற்றும் பெண் போட்டியாளர்களின் ஆடைகள் தொடர்பாக சர்சசைகள் ஏற்பட்டுள்ளன.
கடற்கரை கரப்பந்தாட்டம், மெய்வல்லுநர் போட்டிகள், நீச்சல் போட்டிகள் முதலானவற்றில் பங்குபற்றும் பெண்கள் பிகினி (நீச்சலுடை) அணிந்து விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டி ஏற்பாட்டாளர்கள் பிகினி ஆடைகளுக்கு தடை விதிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதலாவது இஸ்லாமிய ஐக்கிய விளையாட்டு விழா 2005 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டு ஈரானில் நடைபெறவிருந்த போட்டிகள் இலச்சினை தொடர்பான சர்ச்சையால் இரத்துச் செய்யப்பட்டன.
பிகினி ஆடைகள் தடுக்கப்பட்டுள்ள சவூதி அரேபியாவில் முதலாவது இஸ்லாமிய ஐக்கிய விளையாட்டு விழா நடைபெற்றபோதும் நீச்சலுடை அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் ஆண் பெண்களுக்கான போட்டிகள் வெவ்வேறு தினங்களில் நடைபெற்றன. பெண்கள் நீந்துவதை பார்க்க ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை.
















