‘இந்தியாவின் தடுப்பூசிக்காக உலகமே காத்திருக்கிறது’: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்திய கரோனா தடுப்பூசிக்காக உலகம் காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டுகரோனா வைரஸால் பல்வேறுசவால்களையும் அச்சுறுத்தல் களையும் எதிர்கொண்டோம். அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஏராளமான உயிர்களை காப்பாற்றியுள்ளோம். கரோனா வைரஸுக்கு எதிரான போரில் அரசு, தனியார் துறைகள் இணைந்துசெயல்பட்டதால் வெற்றி பெற முடிந்தது.

மருந்துகள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மருத்துவஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். இதற்கு ஆராய்ச்சி, பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்டவற்றில் சுயசார்பு இந்தியா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார சேவைகளுக்கு ரூ.70,000 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு களும் பெருகும்.

கரோனா வைரஸை இந்தியா திறம்பட எதிர்கொண்டதை ஒட்டுமொத்த உலகமும் வியப்புடன் பார்த்தது. வெளி நாடுகளில் இந்திய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை அதிகம் விரும்புகின்றனர். சர்வதேச அளவில் இந்திய மருந்துகள், தடுப்பூசிகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இப்போது இந்திய கரோனா தடுப்பூசிக்காக உலகம் காத்திருக்கிறது.

வரும் முன் காப்போம்

சுகாதாரத் துறையை பொறுத்தவரை ‘வரும் முன் காப்போம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசு 4 முனைகளில் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறது. முதலாவது, நோய்கள் ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தூய்மை இந்தியா, யோகா திட்டங்களும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை வழங்குவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2025-க்குள் காசநோய் ஒழிப்பு

சுகாதார திட்டங்களை நாட்டின் அனைத்து பகுதிகளுக் கும் கொண்டு செல்ல நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்திரதனுஷ் திட்டம் பழங்குடி மக்கள் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் போன்றே காசநோயும் பரவுகிறது. காசநோய்பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும். ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!