தமிழ் மக்களுக்காகச் சாட்சிக் கையயழுத்துப் போட்டிருப்பது சர்வதேசமும், ஐ.நா. சபையும் தான். இங்குள்ள தமிழ்த் தலைவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க மறுத்தால் சாட்சிக்காரர்கள் தான் எமது பிரச்சினையைக் கையிலெடுப்பார்கள் என்று இலங்கை அரசை எச்சரித்தார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.
அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரு வெற்றியைப் பெற்ற பின்னரும், பிளவுபடாத நாட்டுக்குள்ளே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வோம் என்று தான் மிகவும் பொறுப்புடன் சொல்லியிருக்கின்றனர்.
அவர்களது இந்த நல்லெண்ணப் பிரகடனத்தை அரசு புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும். வடக்கிலிருந்து நீட்டப்படும் தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தனின் தேசிய முக்கிய கரத்தை தேச நலன் கருதி இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்.
அரச தலைவருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் அவருக்கு இவற்றை விளக்கிச் சொல்ல வேண்டும். நமது நாட்டுச் சிக்கல் சர்வதேச பிரச்சினையாகிவிட்டது. நமது பிரச்சினை ஐ.நா. சபைக்குப் போய்க் கூடாரம் அடித்து பாய் விரித்துப்படுத்து குடியேறிவிட்டது.
இனிமேல் சர்வதேச சமூகத்திடம் சொல்ல வேண்டாம் என்று ஒப்பாரி வைப்பதில் பலன் இல்லை. இந்த அரசு உலகுக்கு காலம் காலமாகக் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நினைவில் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் தந்தை செல்வாவை ஏமாற்றியது போல் உலகை ஏமாற்ற நினைக்க வேண்டாம்.
தமிழ் மக்களுக்கு இன்று சாட்சிக் கையயழுத்துப் போட்டிருப்பது ஐ.நாவும் சர்வதேசமும் தான். பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகாரத்தைப் பகிர்ந்து வாழ்வோம் என்று சொல்லும் தமிழ்த் தலைவர் இருக்கும்போதே பேசித் தீர்த்து தீர்மானத்துக்கு வந்து முடிவு காணுங்கள். இல்லாவிட்டால் உலகம் நமது பிரச்சினையைத் தனது கைகளில் எடுத்துக் கொள்ளும் நாள் வரும்.
நீங்கள் மீண்டும் தவறு செய்தால் நாங்கள் விரும்பாவிட்டாலும் கூட, முழு உலகமும் தமிழர் தரப்பாக மாறி நியாயம் தேடும் நாள் வரும். இந்த எச்சரிக்கையை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு திரைமறைவில் பேச்சு
இன்று மஹிந்த அரசுக்கு எதிராக நாங்கள் பொது எதிரணிக்ளளள கட்சி. இந்த தமிழ், முஸ்லிம், சிங்கள விரோத மஹிந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் முகமாக பலமான எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தற்போது பல்வேறு திரை மறைவுப்பேச்சுகள் நடைபெறுகின்றன. அவற்றை நான் பகிரங்கமாகச் சொல்ல முடியாது. அவை வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சி கூட்டணி ஒன்று விரைவில் உருவாக நாம் உழைப்போம்.
ஐக்கிய தேசிய கட்சி நாட்டை ஆண்ட கட்சி. ஆளப்போகும் கட்சி. அது இன்று பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிகாரர்கள் புத்தியை பயன்படுத்தி வேலை செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும் என நான் சொல்ல வரவில்லை.
அந்தக் கட்சி பலமாக இருப்பது, அவர்களுக்கு மாத்திரம் அல்ல; எங்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. இன்று இந்தக் கட்சி காயம் பட்டுள்ளது. விழுந்து காயம் பட்டவர்களை அடிக்க நான் விரும்பவில்லை.
உண்மையில் கடந்த கால நிகழ்வுகளை காட்டி, நான் தான் ஐக்கிய தேசிய கட்சியை அதிகம் அடிக்க வேண்டும். நான் அத்தகைய பண்பாடு இல்லாதவன் அல்லன். அல்லது இதைக் காரணம் காட்டி அரசுடன் கரங்கோர்க்க விரும்புகின்றவனும் அல்லன்.
உண்மையில் கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களின் பிறகும்கூட, அவற்றை மறந்து விட்டு இன்றும் ஐ.தே.கவின் ஒரேயயாரு மாநகரசபையான கொழும்பு மாநகர சபை நிர்வாகத்தை நடத்த நாங்கள் தான் உதவுகின்றோம். – என்றார்.
















