இலங்கை, வடக்கு மாகாண தேர்தல், இந்திய-இலங்கை நாடுகளின் கூட்டுச் சதி என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் நளினியை சந்திக்க, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ இன்று வேலூர் வந்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது ‘‘குற்றம் செய்யாமல் பேரறிவாளன், முருகன் மற்றும் நளினி ஆகியோர் சிறையில் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். இவர்களுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதாடினார். ஆனால் காங்கிரஸ் தூண்டுதலின் பேரில், ‘சென்னையில் வழக்கு நடந்தால் பிரச்னைகள் ஏற்படும். அதனால் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்’ என்று கூறி மாற்றினார்கள்.
தற்போது அக்டோபர் 22 ஆம் தேதி மரண தண்டனை கைதிகளின் விசாரணை 5 நீதிபதிகளைக் கொண்டு உச்சநீதி மன்றத்தில் தொடங்குகிறது. அதில் பேரறிவாளன், முருகனின் வழக்குகள் இடம் பெறவில்லை. அது இடம் பெறுமா? இல்லையா? என்பது 22 ஆம் தேதிக்கு பிறகு தெரியும். நிச்சயமாக நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
தற்போது இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கின்றது. அனைவரும் போர்க்குற்றங்ளை நடந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்றும், காமன்வெல்த் உறுப்பினர் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் அமைதி நிலவுவதாக கூறி 25 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தேர்தலை நடத்தி நாடகம் ஆடுகிறார்கள். இலங்கையில் நடந்த தேர்தல் இந்திய-இலங்கை நாடுகளின் கூட்டுச் சதி. லட்சக்கணக்கான மக்களை அழித்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடத்துவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்’’ என்றார்.
-ஏ.சசிகுமார்
















