சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைக்காததால் தன்மானம் காக்கப்பட்டுள்ளது: கருணாநிதி

karunanidhi3சினிமா நூற்றாண்டு விழாவுக்கு என்னை அழைக்காததால், எனது தன்மானம் காக்கப்பட்டு இருக்கிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவு விழாவினை நான்கு நாட்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள். 24 ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு, கடந்த நூறாண்டு காலத்தில் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காகப் பெரிய பங்காற்றிய ‘முதல் சாதனையாளர்’ ஜெயலலிதாவிற்கு முதல் விருதினை வழங்கி அவரைப் பெரிதும் பாராட்டியதோடு, மற்றவர்களுக்கும் விருதுகளை வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார்.

இந்த விழா தொடர்பாக என்னைப் பற்றிப் பலரும் குறிப்பிட்டுப் பல்வேறு ஏடுகளில் எழுதியிருக்கிறார்கள். செய்தியாளர்கள் பலரும் என்னைச் சந்தித்தபோது அதைப்பற்றி என்னிடம் கேட்டார்கள். இந்த சினிமா விழாவினைப் பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றாலும், என்னுடைய கருத்தை எழுத வேண்டுமென்று பலரும் பெரிதும் வலியுறுத்தியதின் பேரில், நான் படித்த, கேள்விப்பட்ட செய்திகளை மட்டும் தொகுத்து வெளியிடுகின்றேன். இது யாரையும் குற்றஞ்சாட்டுவதற்காகவோ, தவறு காண்பதற்காகவோ அல்ல. அரசின் சார்பில், ஓர் அமைப்பின் சார்பில் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து அரசு தரும் நிதி உதவியோடு இதுபோன்ற விழாக்களை நடத்தும்போது, மற்றவர்கள் குற்றம் சொல்வதற்குச் சிறிதும் வாய்ப்பளிக்காத வகையில் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஏனென்றால் கர்நாடக கலாசாரத்துறை அமைச்சர், இந்த விழாவிற்கு கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த திரைத்துறை கலைஞர்கள், இடவசதி, போக்குவரத்து வசதி, உரிய அனுமதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையிலே இடம் ஒதுக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல, அவர்கள் முன் வரிசையில் சென்று அமர்ந்த பிறகு, அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி பின் வரிசையில் அமரச் செய்தது, ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்திய அநாகரிகச் செயலாகும்.

நான் மறுபடியும் கூறுகிறேன், ஏதோ குறை சொல்ல வேண்டுமென்பதற்காக இதனைத் தெரிவிக்கவில்லை. முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ இதையெல்லாம் கவனிக்க நேரம் இடந்தராது. நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள்தான் ஆழ்ந்து ஆலோசித்துக் கவனித்திருக்க வேண்டும். ஏனென்றால் கலைஞர்கள் எப்போதும் மிகவும் சுயமரியாதை உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் மனம் வேதனை அடையும்படி, தன்மானம் காயப்படும்படி நடந்து கொள்ளக்கூடாது.

சினிமாவுக்குப் பெருமை சேர்த்த கலைஞர்கள் அனைவரும், இந்த நூற்றாண்டு விழாவில் ஆனந்தமாக இல்லை. எல்லோருமே தங்களை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றே புழுங்குகின்றனர் என்கிறார்கள் தமிழ்ச்சினிமாவின் பிரபலங்கள். தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் ரஜினி, ‘விழாவிற்கு நான் சென்றிருக்கக்கூடாது. பிலிம் சேம்பர் அழைத்ததே என்பதற்காகத்தான் போயிருந்தேன். ரொம்ப ரொம்ப அவமானப்படுத்தி விட்டார்கள். ஒவ்வொரு கலைஞனும் இந்த விழாவில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான்’ என்று தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாக ‘கோலிவுட்’டில் செய்தி பரவியுள்ளது. ஆனால் அங்கே அழைக்கப்பட்ட சில பெரிய கலைஞர்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்த ஏடுகளின் மூலம் படிக்கும் போது, ‘நல்லவேளை நம்மை அழைக்காமல் விட்டார்களே, நம் ‘தன்மானம் காப்பாற்றப்பட்டதே’ என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply