ஈரானின் புதிய ஜனாதிபதியான ஹஸன் ரௌஹானியுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்திற்காக ஈரானிய ஜனாதிபதி ரௌஹானி நியூயோர்க் சென்றிருந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவருடன் உரையாடினார்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற உரையாடல் 15 நிமிட நேரம் நீடித்தது.
1979 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்க, ஈரானிய தலைவர்களுக்கு இடையில் இடையில் இடம்பெற்ற முதலாவது நேரடி உரையாடல் இதுவாகும்.
சுமார் 34 ஆண்டுகளின் பின்னர் இவ்வரு நாடுகளின் தலைவர்களிடையில் இடம்பெற்ற இந்த உரையாடல் வரலாற்று முக்கித்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபதியை சந்திப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்பியிருந்தார். ஏனினும் இத்தகைய சந்திப்பு தற்போதைய நிலையில் சிக்கலானதாக அமையும் என ஈரானிய தரப்பு கருதியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அமெரிக்க நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவிலிருந்த தான்வெளியேறுவதற்கு முன்னர் தொலைபேசி மூலம் உரையாடுவதற்கு ஈரானிய ஜனாதிபதி ரௌஹானி விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலுக்கு அவசர ஏற்பாடுகளை வெள்ளை மாளிகை மேற்கொண்டது.
முன்னதாக அமெரிக்க ராஜாங்கச்செயலாளர் ஜோன் கெரியும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாட் ஸரீப்பும் வியாழக்கிழமை கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
















